திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள களப்பாளகரம் நடுத்தெருவை சேர்ந்தவர் மோகன்). ரவுடியான இவர் மீது பாலையூர் போலீஸ் நிலையத்தில் 2 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன.
 
இந்த வழக்குகளில் மோகனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை அனுபவித்து வந்த அவர் சிறையில் இருந்து ஒரு ஆண்டுக்கு முன்பு விடுதலை ஆனார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் பரவக்கரை கருவேலி சாலை வழியாக வடமட்டத்திற்கு தனது சொந்த காரில் மோகன் வந்து கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டி வந்தார்.

அப்போது ஆட்டோவில் வந்த 5 பேர் கும்பல் மோகன் ஓட்டி வந்த காரை வழிமறித்தது. இதனால் மோகன் காரை நிறுத்தினார். உடனே ஆட்டோவில் வந்த 5 பேர் கும்பல் காருக்கு உள்ளே இருந்த மோகனை வெளியே இழுத்துப்போட்டு சரமாரியாக அரிவாளால் வெட்டினர். 

கத்தியாலும் குத்தினர்.இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மோகன் துடி துடித்து இறந்தார். பின்னர் அந்த கும்பல் தாங்கள் வந்த ஆட்டோவில் ஏறி அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இந்த கொலை சம்பவம் பற்றி அறிந்த எரவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு கொலை தொடர்பாக விசாரணை நடத்தினர். பழிக்கு பழியாக அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகிறார்கள். 

அதே நேரத்தில் இந்த கொலை வழக்கு தொடர்பாக 5 பேர் தஞ்சை மாவட்டம் திருவையாறு கோர்ட்டில் சரண் அடைந்தனர். இவர்கள் அனைவரையும் 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டதையடுத்து 5 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.