திருமலை திருப்பதியில் பிரபல ரவுடி ஓட ஓட விரட்டி கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் வழியான திருமலை பைபாஸ் சாலையில் உள்ள எஸ்.கே ஹோட்டல் அருகே நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அப்பகுதியில் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ரவுடி பெல்ட் முரளியை மர்ம நபர்கள் வழிமறித்து சரிமாரியாக வெட்டியுள்ளனர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த ரவுடி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை நேரில் கண்ட பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். பின்னர், இதுதொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரவுடி பெல்ட் முரளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

கொலை செய்யப்பட்ட ரவுடி பெல்ட் முரளி மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்று இருக்கலாம் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சியகளை ஆய்வு செய்து வருகின்றனர்.