சென்னையில் கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடியை துப்பாக்கி முனையில் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

சென்னை பாலவாக்கம் கடற்கரைக்கு வருவோரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி தொடர் வழிப்பறி நடப்பதாக நீலாங்கரை போலீசுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. கடந்த 3-ம் தேதி அன்று 2 செல்போன்கள் மற்றும் 2000 ரூபாய் ரொக்கம் வழிப்பறி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட நபர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். 

அதில், நாங்கள் இருவரும் சென்னை பாலவாக்கம் கடற்கரையிலிருந்து பள்ளிக்கரனைக்குச் செல்லும்போது, 4 பேர் வழிமறித்தனர். பிறகு, அவர்கள் எங்களிடமிருந்த 2 செல்போன்கள் மற்றும் பணத்தைப் பறிக்க முயன்றனர். கொள்ளையர்களுடன் நாங்கள் இருவரும் போராடினோம். அப்போது அரிவாளால் வெட்டினர். அதைத் தடுத்தபோது உள்ளங்கையில் வெட்டு விழுந்தது. அதற்காக 7 தையல்களைப் போட்டுள்ளோம். எங்களிடம் செல்போன்கள், பணத்தைப் பறித்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, வாகனச் சோதனையில் ஈடுபட்ட போலீசார் கொள்ளையனைத் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், நேற்றிரவு போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு இளைஞன் போலீசைக் கண்டதும் வாகனத்தை கீழே போட்டு விட்டு தப்பி ஓடியுள்ளான். மேலும், அவன் கையில் கத்தி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அவனை விடாமல் தூரத்திச் சென்றனர். 

ஒரு கட்டத்தில் போலீசார் ரவுடியை துப்பாக்கி முனையில் கைது செய்தனர். பின்னர், அவனிடம் விசாரணை மேற்கொண்டதில் பாலவாக்கத்தைச் சேர்ந்த வழிப்பறிக் கொள்ளையன் கோபி என்கிற கோபாலகிருஷ்ணன் என்பது தெரியவந்தது. மேலும், கோபி மீது ஒரு கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.  இதனையடுத்து அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, அவன் பாத்ரூமில் வழுக்கி விழுந்து கையை உடைத்துக் கொண்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.