ஆவடியை அடுத்த அய்யப்பன் நகர் சேக்காடு மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஜெகதீசன் திருநெல்வேலியைச் சேர்ந்த இவர்,  சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழக அரசு அச்சகத்தில் சூப்பிரண்டாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சுகுமாரி கல்வித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஜெகதீசன், தனது மனைவி சுகுமாரியை பிரிந்து, அரசு அச்சகத்தில் வேலை செய்து வந்த விலாசினியை  திருமணம் செய்து கொண்டார். இவருக்கு பிள்ளைகள் இல்லை. விலாசினி கணவரை பிரிந்து வாழ்ந்தவர்.

ஜெகதீசன் சேக்காடு பகுதியில் பண்ணை வீடு கட்டி விலாசினியுடன் வசித்து வந்தார். விலாசினி கடந்த  1½ மாதத்துக்கு முன்பு தான் ஓய்வு பெற்றார். இந்த வீட்டை சுற்றி அருகில் வீடுகள் கிடையாது. வயல் மட்டுமே உள்ளது. வயதான இருவரும் தங்களுக்கு உதவியாக இருக்க ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சுரேஷ், அவரது மனைவியை வேலைக்கு வைத்தனர். மேலும் 2 நாய்களையும் வளர்த்து வந்தனர்.

வேலைக்காரர்களை  தாங்கள் தங்கி இருக்கும் வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு அறையில் 15 நாட்களுக்கு முன்பு குடிவைத்து தோட்டத்தை பராமரிக்கவும், தங்களுக்கு உதவியாக இருக்கும்படியும் கூறியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று காலை ஜெகதீசன் வீட்டுக்கு தச்சுத்தொழிலாளி சந்திரசேகர் வேலை செய்ய வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. அவர் உள்ளே சென்று பார்த்த போது வீட்டுக்குள் ஜெகதீசன், விலாசினி ஆகியோர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவரது வீட்டில் தங்கியிருந்த ஆந்திராவை சேர்ந்த சுரேஷ், அவரது மனைவியையும் காணவில்லை. வீட்டுக்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடந்தன.

இதைத் தொடர்ந்து அம்பத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து  பிணங்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு  அனுப்பி வைத்தனர்.


கொலைக்கு பயன்படுத்திய சுமார் 3 அடி நீளமுள்ள இரும்பு குழாயை கொலை நடந்த வீட்டுக்கு பக்கத்தில் உள்ள வயலில் இருந்து போலீசார் மீட்டனர். அதில் ரத்தக்கறை இருந்தது. கொலையாளி கையில் துணியை சுற்றிக்கொண்டு இரும்பு குழாயால் அடித்து கொலை செய்திருப்பதாகவும், அதில் கொலையாளியின் கைரேகை பதியவில்லை எனவும் போலீசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆந்திராவை சேர்ந்த சுரேஷ், அவருடைய மனைவியைத் தேடி வருகின்றனர்.