கோபிசெட்டிப்பாளையத்தில் மகளை திருமணம் செய்து கொடுக்க மறுத்த தாயை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் சங்கரன் வீதியைச் சேர்ந்தவர் தமிழ்தாசன். இவரது மனைவி மேரி. இவர்களுக்கு 4 மகள்கள் உள்ளனர். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தமிழரசன் இறந்து விட்டார். இதையடுத்து மேரி தள்ளுவண்டியில் ரெடிமேட் துணி மற்றும் பேன்சி பொருட்கள் விற்பனை செய்து வந்தார். மேரியின் மூத்த மகள் அன்னமேரிக்கு மட்டும் திருமணமாகி விட்டது. மற்ற 3 பேருக்கும் திருமணமாகவில்லை. மேரியின் திருமணமாகாத மூன்று மகள்களும் தாசம்பாளையத்தில் உள்ள தனியார் நுற்பாலையில்  வேலை பார்த்து வந்தனர்.

இந்நிலையில், மேரியின் பக்கத்து வீட்டைச்சேர்ந்த ராணி என்பவரது வீட்டுக்கு பர்கூரை சேர்ந்த அவரது அண்ணன் மகன் லாரி டிரைவர் முருகன் என்பவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது மேரியின் கடைசி மகள் வர்ஷினியை அவர் ஒருதலையாக காதலித்து வந்தார். இது பற்றி தெரிய வந்ததும் மேரி லாரி டிரைவர் முருகனை கண்டித்தார். இதனால் முருகனுக்கு மேரி மீது கோபம் ஏற்பட்டது. 

நேற்றிரவு மேரியின் மூத்த மகள் வீட்டுக்கு தன் கணவருடன் வந்திருந்தார். மூன்று பேரும் வீட்டுக்கு வெளியே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். இந்த சமயத்தில் அங்கு இரு சக்கரவாகனத்தில் வந்த முருகன் என்பவர் , உன் மகளை எனக்குக் கல்யாணம் செய்து தர மறுக்கிறாயா?' என்று கத்தியவாரே அரிவாளை எடுத்து மேரியை வெட்டினார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அருகில் இருந்தவர்கள் முருகனைத் தடுக்க முயன்றனர். இதில், கணேசன் என்பவருக்கும் வெட்டு விழுந்தது. மேரியும் கணேசனும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். இதையடுத்து, அங்கிருந்து முருகன் தப்பி ஓடி விட்டார். 

இதையடுத்து காயமடைந்த 2 பேரையும் மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக மேரியை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மேரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய லாரி டிரைவர் முருகனை தேடி வருகின்றனர்.