இந்தியாவில் தடை செய்யப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள சிவப்பு காது நட்சத்திர ஆமைகள், போலி ஆவணங்கள் மூலம் கடத்தி வந்த முதியவர் உள்பட 2 பேரை, அதிகாரிகள் கைது செய்தனர்.

தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து நேற்று அதிகாலை 1.30 மணிக்கு தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை வந்தது. அதில் வந்த பயணிகளை, விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ராமநாதபுரம் மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த முஜ்பூர்ரகுமார் (22), அப்துல்வகாப் (68) ஆகியோர் சுற்றுலா பயணியாக தாய்லாந்து சென்று திரும்பினர். இவர்களிடம் பெரிய அளவில் 6 அட்டை பெட்டிகள் இருந்தன. இதை பார்த்து சந்தேகமடைந்த சுங்கத்துறை அதிகாரிகள், அவர்களிடம் விசாரித்தனர். அதற்கு, தாய்லாந்து நாட்டில் இருந்து நவீன விளையாட்டு பொருட்கள் வாங்கி வந்ததாகவும், இதன் மதிப்பு குறைவு. சுங்கத் தீர்வு செலுத்தும் அளவுக்கு இல்லை என்றனர். 

ஆனால், சந்தேகம் தீராத அதிகாரிகள், அந்த 6 அட்டை பெட்டிகளையும் பிரித்து பார்த்தனா். அதில், உயிருடன் கூடிய சிகப்பு காது அலங்கார நட்சத்திர ஆமைகள் இருப்பது தெரிந்தது. மொத்தம் 4800 ஆமைகள் இருந்தன. இதன் மதிப்பு ரூ10 லடச்ம் என கூறப்படுகிறது. இதையடுத்து அதிகாரிகள், ஆமைகள் கூறித்து விசாரித்தபோது, உரியமுறையில் கொண்டு வந்ததாக கூறி சில ஆவணங்களை கொடுத்தனர். அதை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, அது போலி ஆவணம் என தெரியவந்தது.

இதையடுத்து அதிகாரிகள், அந்த ஆமைகளை கைப்பற்றி, 2 பேரையும் கைது செய்தனா். பின்னர், பெசன்ட் நகரில் உள்ள வன உயிரின பாதுகாப்பு குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனா். அதன்பேரில் அதிகாரிகள் விமான நிலையம் சென்று ஆய்வு செய்தனா். அப்போது, இந்த சிவப்பு காது அலங்கார நட்சத்திர ஆமைகளை இந்தியாவில் அனுமதிக்க முடியாது. இதுபோன்ற உயிரினங்கள் கொண்டு வரும்போது சர்வதேச வன உயிரின பாதுகாப்பு ஆணையத்தில், சிறப்பு அனுமதி பெற வேண்டும். 

அதேபோல் நமது நாட்டின் வன உயிரின பாதுகாப்பு துறையின் அனுமதியும் பெற்று, சர்வதேச சுகாதார துறையினரிடம், இந்த உயிரினங்களுக்கு நோய் தொற்று இருக்கிறதா, கிருமிகள் அடங்கிய உயிரினமா என பரிசோதனை செய்து, தடையில்லா சான்று பெற வேண்டும் என விதி உள்ளது. அப்படியே இந்த ஆமைகளுக்கு, அனைத்து சான்றிதழ்கள் பெற்று இருந்தாலும், இதை இந்தியாவுக்குள் அனுமதிக்க முடியாது. இது நமது நாட்டில் தடைசெய்யப்பட்ட உயிரினம். இதை அனுமதித்தால், நீர் நிலைகள் பாதிக்கப்படும். சிவப்பு காது அலங்கார நட்சத்திர ஆமைகள், குளிர் பிரதேசங்களான தாய்லாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் அதிகமாக உள்ளன. இந்த ஆமைகள் இருந்தால், நமக்கு நீர் நிலை பாதிக்கும், நோய்கள் பரவும்.இதனால், இதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. 

இந்த ஆமைகள், எந்த நாட்டில் இருந்து வந்ததோ, அங்கேயே திருப்பி அனுப்பும்படி கூறினர். மேலும், இந்த ஆமைகளை போலி ஆவணங்கள் மூலம் கடத்தி வந்த 2 பேரிடம், இங்கிருந்து ஆமைகள் அனுப்புவதற்கான செலவு ₹2 லட்சத்தை அபராதமாக பெற வேண்டும் என கூறினர். இதையடுத்து அந்த ஆமைகள், இன்று அதிகாலை 2.30 மணிக்கு, சென்னையில் இருந்து தாய்லாந்து செல்லும் விமானத்தில் அனுப்பப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில் பிடிபட்ட 2 பேரையும் கைது செய்த அதிகாரிகள், இதற்கு முன் இதுபோல் கடத்தி வந்துள்ளார்களா, இவர்களின் பின்னணியில் யார் உள்ளனர் என தீவிரமாக விசாரிக்கின்றனர்.