பொன்னேரி அருகே இன்று காலை ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே இலவம்பேடு பகுதியில் உள்ள கண்டெய்னர் கம்பெனியில் இன்று காலை தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அதிவேகமாக ஒரு  காரில் 8 பேர் கும்பல் வந்தது. காரில் இறங்கி திபுதிபுவென இறங்கிய அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரை ஓட ஓட சரமாரியாக வெட்டினர். இதனையடுத்து, அந்த கும்பல் காரில் தப்பித்து சென்றது.

பின்னர், ரத்த வெள்ளத்தில் அலறி துடித்தார். உடனே சத்தம் கேட்டு கண்டெய்னர் கம்பெனியில் இருந்த தொழிலாளர்கள் ஓடி வந்தனர். இதுதொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பலத்த வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு போராடிய வாலிபரை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் சென்னை திருவொற்றியூரை சேர்ந்த சரவணன்(35) என்பதும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததும் தெரிந்தது. தொழில்போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரித்து வருகின்றனர்.