திருநெல்வேலி மாவட்டம் பழையபேட்டை அருகே இருக்கும் கரையடி பச்சேரியைச் சேர்ந்தவர் சகாதேவன். இவரது மகன் இசக்கி முத்து என்கிற கணேஷ் பாண்டியன்(26). கூலித்தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார். இவர் மீது பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதற்கான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. ஸ்ரீவைகுண்டத்தில் கணேஷ் என்பவர் சில மாதங்களுக்கு முன் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார்.

கொலையில் இசக்கிமுத்துவிற்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இன்று காலையில் வீட்டில் இருந்து இசக்கிமுத்து வெளியே சென்றிருக்கிறார். அப்போது அவரை மர்ம கும்பல் ஒன்று பின்தொடர்ந்து வந்துள்ளது. திடீரென அவரை வழிமறித்த அக்கும்பல் கத்தி, அருவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் தாக்க தொடங்கியிருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த இசக்கி முத்து, தப்பி ஓடினார்.

ஆனால் அவரை விடாமல் துரத்திய மர்ம கும்பல், திருநெல்வேலி-தென்காசி சாலையில் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டியது. இதில் சரிந்து விழுந்த இசக்கி முத்து ரத்தவெள்ளத்தில் துடித்தார். பின் அக்கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் இசக்கிமுத்துவை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்ற போது அவர் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

கொலைவழக்கு பதிவு செய்த காவலர்கள் விசாரணை மேற்கொண்டு தப்பியோடிய கொலையாளிகளை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.