கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. கடைகள், வணிக வளாகங்கள், பொது போக்குவரத்து,கல்வி நிறுவனங்கள் அனைத்தும் முடக்கப்பட்டு மக்கள் வேலைக்கு செல்லாமல் வீடுகளிலேயே முடங்கி இருப்பதால் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் தமிழகத்தில் மக்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் மற்றும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இக்கட்டான இந்த சூழலிலும் நிவாரண நிதியாக அனுப்பி வைக்கப்பட்டிருந்த அரிசி கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே இருக்கும் சின்னியம்பாளையத்தில் ரேஷன் கடை ஊழியராக பணியாற்றி வருபவர் வேலாயுதம்(48). இவர் பணியாற்றும் கடையிலிருந்து அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத்துறை காவலர்களுக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது கடைமுன் இருந்த சரக்கு வாகனமொன்றில் 200 கிலோ அரிசி கடத்தப்பட்டு புறப்பட தயாராக இருந்தது.

இதையடுத்து கடை விற்பனையாளர் வேலாயுதத்தையும் சரக்கு வாகன ஓட்டுநர் அருண்(24) என்பவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அரிசியை கடத்தி வட மாநிலத் தொழிலாளர்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது. பின் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் பவானி சிறையில் அடைத்தனர். மேலும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த சரக்கு வாகன உரிமையாளர் கனகராஜ் என்பவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.