சென்னையில் கடந்த 5 ஆண்டுகளாக பாலியல் ரீதியாக தொடர்பில் இருந்து வந்த 54 வயது முதியவரை கத்தியால் குத்தி கொன்றதாக கைதான பட்டதாரி இளம்பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். 

சென்னை துறைமுகம் விளையாட்டு மைதானம் அருகே ரத்த வெள்ளத்தில் சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் புதுவண்ணாரப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் திருவொற்றியூரைச் சேர்ந்த சேகர் என்கிற அம்மன் சேகர் என்பதும் தெரியவந்தது. 

இது தொடர்பாக அக்கம் பக்கத்தில் விசாரித்த போது பெண் ஒருவர் அம்மன் சேகரிடம் பேசிக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண் யார்? என்பது பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவரே கொலை செய்து இருக்கும் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இதனையடுத்து, அந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. 

அதில், கொலையான சேகருக்கு கல்லூரி படிப்பு முடித்த மகள் ஒருவர் இருக்கிறார். அவருடைய வகுப்புத் தோழியான பவித்ரா, சேகரின் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். அப்போதுதான் அம்மன் சேகர் இளம்பெண்ணிடம் நெருக்கமாக பழக ஆரம்பித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக மகளின் தோழி என்றுகூட பார்க்காமல் அம்மன் சேகர் இளம்பெண்ணுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளார். 

இதனையடுத்து, பவித்ராவுக்கு அவரது பெற்றோர் வரன் பார்க்கத் தொடங்கியுள்ளனர். இதை அறிந்த அம்மன் சேகர் தன்னைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் வேறு யாரையும் திருமணம் செய்யக் கூடாது என்று கூறியுள்ளார். உனக்கு தெரியாமல் செல்போனில் ஆபாச படங்களை எடுத்து வைத்துள்ளேன். நான் சொல்வதை கேட்காவிட்டால் அதை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்றும் அம்மன் சேகர் மிரட்டியுள்ளார். இதனால், அம்மன் சேகரை கொலை செய்ய திட்டமிட்டிருந்தார். 

இந்நிலையில், சேகரின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக நேற்றிரவு காதலியுடன் அடையாறு சென்றுள்ளார். பின்னர், வழக்கமாக அவர்கள் சந்திக்கும், துறைமுகம் விளையாட்டு மைதானம் அருகே வந்ததும் சர்ப்ரைஸ் தருகிறேன் கண்களை மூடச் சொல்லியுள்ளார். அவர் கண்ணை மூடியதும் தான் வைத்திருந்த பசையை கண்ணில் பீய்ச்சி அடித்தார். பின்னர் கழுத்தில் கத்தியால் குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அம்மன் சேகர் உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.