திரைப்படங்களை தாண்டி பொதுவெளியிலும் தலித் மக்களுக்காக குரல் கொடுத்துவரும் பா.ரஞ்சித், கோவையில் நடந்த ஆணவ படுகொலைக்கு எதிராக தனது கடுமையான கண்டனக் குறளை பதிவு செய்துள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்  பகுதியை சேர்ந்த கருப்பசாமிக்கு வினோத் , கனகராஜ் , கார்த்திக் என்ற மூன்று மகன்கள் இருந்தனர். இதில் கனகராஜ், வெள்ளிப் பாளையம் ரோட்டில் உள்ள ஒரு தலித் சாதியை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால்,இவர்களுடைய காதல் இருவீட்டாருக்கும் தெரியவந்தது. இந்த காதலுக்கு கனகராஜின் தந்தை கருப்பசாமி மற்றும் சகோதரர்கள் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்தநிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு கனகராஜ் தனது காதலியை கல்யாணம் செய்துகொண்டு, அதே பகுதியில் ஒரு வாடகை வீட்டுக்கு சென்று விட்டார். இந்த விஷயம் தெரிந்த கனகராஜின் அண்ணன் வினோத் நேற்று முன்தினம் மாலை 5.20 மணியளவில் வினோத், கனகராஜின் வீட்டுக்கு சென்றார். அப்போது அண்ணன்-தம்பிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.இதில் ஆத்திரம் அடைந்த வினோத் தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் கனகராஜை சரமாரியாக வெட்டினார். ரத்த வெள்ளத்தில் அவர் அலறித்துடித்தார். அவரது சத்தம் கேட்டு காதலி ஓடி வந்து தடுக்க முயன்றார். இதனால் அந்த இளம் பெண்ணின் தலை மற்றும் முகத்தில் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். அதன்பிறகும் ஆத்திரம் அடங்காத வினோத், கனகராஜை அரிவாளால் வெட்டினார். இதில் தலையில் படுகாயம் அடைந்த அவர்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

உடனே வினோத் அந்த வீட்டில் இருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து கனகராஜின் காதலியை மீட்டு சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு சிகிச்சைப் பலனின்றி பலியானார்.

இந்நிலையில் இந்த படுகொலை சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இயக்குனர் பா.ரஞ்சித்,  தமிழ் உணர்வுக்கு  எதிரானவர்களை எதிர்ப்பது போல! அணுக்கழிவு எதிர்ப்பை  போல! தண்ணீர் பற்றாக்குறை பற்றி பேசுவதை போல!  இந்துதுவத்தை எதிர்ப்பதை போல! சுயசா’தீ’ பற்று எனும்
பெரூம் தீமையையும் நாம் எப்போது ஒன்றிணைந்து  எதிர்க்க போகிறோம் ?!! எனக் கூறியுள்ளார்.

தனது அடுத்த டிவீட்டில்; கனகராஜ் இறந்த பின்பும் #வர்ஷினிபிரியா நீ எதை நினைத்து உன் உயிரை பிடித்து கொண்டு இத்தனை நாள் இருந்தாய்? முடிவில் ஏமாற்றமடைந்து இறந்து விட்டாய் !? , ஆம் நீங்கள் காளை மாடு அல்ல தமிழ் நாடே உங்கள் படுகொலையை கண்டித்து  திரண்டு போராடுவதற்க்கு! என கூறியுள்ளார்.

கடைசியாக; நாம் ராஜராஜனுக்கு ஆதரவு-எதிராகவும் திரண்டபோதுதான், பாராளுமன்றத்தில் தமிழ்வாழ்க!முழக்கமிட்டபோதுதான், அனல்மின் கழிவை கொட்டக்கூடாது என்று எதிர்த்து கொண்டிருக்கும்போதுதான், தண்ணீர் இல்லாமல் நாம் தந்தளித்து கொண்டிருக்கும்போதுதான், #கனகராஜ்_வர்ஷினிபிரியா உங்கள்  படுகொலை நிகழ்ந்தேரியது எனக் கூறியுள்ளார்.