ஹோட்டல் தமிழ்நாடு பணியாளர் குடியிருப்பில் வேறொரு பெண்ணுடன் குடித்தனம் நடத்திய மேலாளர் தலைமறைவாகியுள்ளார். மனைவியின் புகாரைத் தொடர்ந்து தலைமறைவான மேலாளரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளது நிர்வாகம்.

ராமேஸ்வரத்தில் தமிழக சுற்றுலாத்துறையின் கீழ் ஹோட்டல் தமிழ்நாடு இயங்கி வருகிறது. இந்த ஹோட்டலின் மேலாளராக யுவராஜ் என்பவர் சில மாதங்களுக்கு முன் பொறுப்பேற்றார். இவருக்கு ரேகா என்ற மனைவியும் 3 வயதுக் குழந்தையும் உள்ளனர். ராமேஸ்வரத்தில் உள்ள ஹோட்டல் தமிழ்நாடு மேலாளராகப் பொறுப்பேற்ற யுவராஜ், தன் மனைவி ரேகா மற்றும் குழந்தையுடன் காட்டுப்பிள்ளையார் கோயில் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வாடகைக்குக் குடித்தனம் நடத்தி வந்துள்ளார். 

இந்நிலையில் கடந்த 13-ம் தேதி பணிக்குச் சென்ற யுவராஜ் வீடு திரும்பவில்லை. இதனால் ஹோட்டல் தமிழ்நாட்டுக்குச் சென்ற ரேகா, அங்கிருந்த ஊழியர்களிடம் தன் கணவர் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, ஹோட்டல் வளாகத்தில் உள்ள மேனேஜருக்கான குடியிருப்பில் கவிதா என்ற பெண்ணை தன் மனைவி எனக் கூறி அவருடன் யுவராஜ் தங்கியிருந்ததாக சக ஊழியர்கள் கூறியுள்ளனர். இதனால் சொந்த மனைவி ரேகா அதிர்ச்சியடைந்துள்ளார். இதனால் ஹோட்டல் ஊழியர்களுக்கும் யுவராஜின் மனைவி கவிதா இல்லை என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து ராமேஸ்வரம் மகளிர் காவல் நிலையத்தில் தன் கணவரைக் கண்டுபிடித்துத் கொடுக்குமாறு  ரேகா புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில் சென்னை சுற்றுலாத்துறை தலைமை அலுவலகத்தில் பணியாற்றிய கவிதாவுக்கும் யுவராஜுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் தகாத உறவாக மாறி இருவரும் பல முறை வெளியில் சென்று உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்நிலையில், யுவராஜ் ராமேஸ்வரத்தில் மேலாளர் பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். 

இதைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட யுவராஜ், ஏற்கெனவே கல்யாணமாகி இரு குழந்தைகள் உள்ள கவிதாவை தன் மனைவி எனக் சொல்லி ராமேஸ்வரம் ஹோட்டல் வளாகத்தில் உள்ள தனது குடியிருப்பில் தங்க வைத்ததும் தெரியவந்தது. ஆனால், தன் மனைவி ரேகாவை, யுவராஜ் ஹோட்டல் தமிழ்நாட்டுக்கு ஒருமுறைகூட அழைத்து வந்ததில்லை. இதனால் அங்குள்ள ஊழியர்களுக்கும் சந்தேகமும் எழவில்லை.

இந்நிலையில் யுவராஜ் தொடர்ச்சியாக வீட்டுக்கு வராமல் போக இந்த விவகாரம் வெளிப்பட்டுள்ளது. இது குறித்து சென்னையில் உள்ள சுற்றுலாத்துறை அலுவலகத்திலும் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையைத் தொடர்ந்து தலைமறைவான யுவராஜுவை சுற்றுலாத்துறை நிர்வாகம் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளது.