போலி போலீஸ் வாகனத்தில் ஆசிரியரை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய கும்பலை இராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தீவிரமாக தேடிவருகின்றனர். 

ராமநாதபுரத்தில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக சென்னையைச் சேர்ந்த நீதிமணி, ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஆனந்த் ஆகியோரை ராமநாதபுரம் பஜார் போலீஸார் கடந்த ஜூன் 10-ம் தேதி கைது செய்தது.இந்த வழக்கில் ஆசிரியர் ஆனந்த், சென்னையைச் சேர்ந்த நீதிமணியுடன் இணைந்து நடத்திய நிதி நிறுவனத்தில், ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஏராளமான ஆசிரியர்கள் ஏஜெண்டாக செயல்பட்டு பலகோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர்.

அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஆசிரியர்களும் பணம் செலுத்தி ஏமாந்ததாக தொடர்ந்து புகார் வந்த நிலையில் முதலீடு செய்த பணத்துக்கு வட்டியும் தராமல், முதலீடையும் திருப்பித்தராமல் ரூ.3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, ராமநாதபுரத்தைச் சேர்ந்த துளசிமணிகண்டன் புகார் அளித்தார். அதன் அடிப்படையிலேயே இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.அதன்பின் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சென்னை உள்ளிட்ட இடங்களில் அவர்களின் முதலீடு குறித்து விசாரணை செய்தனர். 

இதுகுறித்து ஆசிரியர் ஆரோக்கிய ராஜ்குமார் பேசும் போது...
 "உச்சிப்புளி வட்டாரத்தில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறேன். நிதி நிறுவன மோசடியில் கைதான ஆனந்த் நிதிநிறுவனத்தில் தனக்குத் தெரிந்தவர்களை முதலீடு செய்ய வைத்தேன். கடந்த ஜூலை 1 நள்ளிரவில் என் வீட்டிற்கு  காவல் என எழுதப்பட்ட டாடா சுமோ சுமோ காரில் வந்த 4 பேர் கும்பல் என்னை காரில் ஏற்றிச் சென்றது. காரில் வைத்தே கழுகூரணி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றிவந்தது அக்கும்பல்.ரூ.50 லட்சம் பணம் கேட்டு மிரட்டினார்கள். அந்த கும்பலில் வந்தவர்கள் தங்களை போலீஸ் என கூறி மிரட்டினார்கள். ஜூலை 2 அதிகாலையில் ராமேசுவரம் சாலை போக்குவரத்து நகர் பகுதியில் இறக்கிவிட்டனர். அதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் சிறப்பு குறைதீர்க்கும் கைபேசி எண்ணில் தகவல் தெரிவித்தேன். கேணிக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். 

இதுதொடர்பாக கேணிக்கரை போலீஸார் அடையாளம் தெரியாத நபர்கள் ஆசிரியரை கடத்திச் சென்றதாக வழக்கு பதிவு செய்துள்ளனர். ராமநாதபுரம் டிஎஸ்பி வெள்ளைத்துரை தலைமையில் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர்.
ஆசிரியர் ஆரோக்கிய ராஜ்குமார் கடத்தப்பட்ட கார் சென்ற வழிகளில் உள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளையும் சேகரித்து ஆராய்ந்து வருகின்றனர்.