ராமநாதபுரத்தில் காதலித்து திருமணம் செய்த மனைவி விவகாரத்து கேட்டு வழக்கு தொடர்ந்ததால் ஆத்திரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெட்டி கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். 

ராமநாதபுரம் வ.உ.சி நகரைச் சேர்ந்த தனியார் வாகன ஓட்டுநர் சரவணன் (35). இவரது மனைவி சிவபாலா (32). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனர். சிவபாலா ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகப் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.கணவன், மனைவியருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், ராமநாதபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் விவகாரத்து கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.  

இந்நிலையில் கணவன், மனைவி இருவரும் இன்று ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகினர்.அப்போது, நீதிமன்றத்திலிருந்து பள்ளிக்கு சிவபாலா நடந்து சென்றார். அப்போது பின்தொடர்ந்து சென்ற சரவணன் நீதிமன்றத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்குள் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சிவபாலாவை விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார். 

பின்னர் அரிவாளுடன் சென்று அருகிலிருந்த கேணிக்கரை காவல்நிலையத்தில் சரவணன் சரணடைந்தார்.இதனையடுத்து, மனைவியைக் கொலை செய்த சரவணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் மாவட்ட ஆட்சியர்  அலுவலக வளாகத்தில் கொலை நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.