நவீன தொழில்நுட்பம் வளர்ச்சி பெறுவது ஒருபுறம் இருந்தாலும், அதனால் பல்வேரு தவறுகளும் நடந்து வருவதை யாராலும் மறுக்க முடியாது. இணையதளத்தின் மூலம் பண மோசடி, திருமண மோசடி, என துவங்கி தற்போது பெண்களுக்கு காதல் வலை விரித்து அவர்களுடன் தனிமையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை காட்டி மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

அந்த வகையில் சிக்கியவர் தான், நாகர்கோவிலை சேர்ந்த காசி. இவரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை செய்து வரும் நிலையில், பல அடுக்கடுக்கான உண்மைகள் வெளிவந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

இவரை தொடர்ந்து, இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ் புக் பக்கத்தில், குடும்ப பெண்கள் புகைப்படங்களை தேடி பிடித்து, அவர்களை ஆபாசமாக மாஃபிங் செய்து, பணம் பறித்து வந்த கல்லூரி மாணவர் ஒருவரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த ரோஹித் என்பவர்... அதே பகுதியை சேர்ந்த குடும்ப பெண் ஒருவரின், புகைப்படத்தை முகநூல் பக்கத்தில் இருந்து திருடி... அதனை ஆபாசமாக மாஃபிங் செய்து, அந்த பெண்ணின் கணவருக்கு அனுப்பி ரூபாய் 20 ,000 கேட்டு மிரட்டியுள்ளார். இதுகுறித்து உடனடியாக அந்த பெண்ணின் கணவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார், மிரட்டல் விடுத்தது தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவர் என்பதை கண்டு பிடித்தனர். 

மேலும் இவருக்கு உதவியாக இருந்த நண்பர் உட்பட இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர்கள் உருவாக்கிய போலி கணக்கும் தற்போது முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.