ரஜினியை நேரில் சந்தித்து அவருடன் போட்டோ எடுக்க வேண்டும் என்பது பல ரசிகர்களின் கனவாக உள்ளது. இதனைப் பயன்படுத்தி ரஜினி பழனி என்பவர் மோசடியில் ஈடுபட்டிருக்கிறார். சேலம் ரஜினி மன்றத்தைச் சேர்ந்தவர் என்றும் ரஜினிக்குக் தான் பாடிகாட் என்றும் தன்னை ரசிகர்களிடம் அறிமுகப்படுத்திக் கொண்ட ரஜினி பழனி.

இவர் வாட்ஸ் அப்பில் குரூப் ஒன்றை ஆரம்பித்து ரஜினி ரசிகர்களை கண்டறிந்து ரஜினியைச் சந்திக்கச் செல்லலாம் என்று வாட்ஸ் அப்பில் தெரிவித்து மோசடியில் ஈடுபட்டு வந்ததாகச் சொல்லப்படுகிறது. நதி நீரை இணைக்க ரஜினி சென்னை வரை நடைப்பயணமாக வர சொன்னதாக சொல்லி பெங்களூருவைச் சேர்ந்த தமிழ் செல்வி உட்பட 7 பேரை சேலத்திலிருந்து சென்னை வரை அழைத்து வந்துள்ளார். அப்போது தமிழ்ச்செல்வியிடம் ஒன்றரை லட்சம் பணம் மற்றும் நகைகளை வாங்கிக் கொண்டு ஏமாற்றியுள்ளார்.

இதுமட்டு மின்றி தனது வீட்டுத் கல்யாண நிகழ்ச்சிக்கு ரஜினியை அழைக்க செல்வதாக சொல்லி 10 பேரை அழைத்துக் கொண்டு வந்து பின் ரஜினி அவரது வீட்டில் இல்லை என்று ஏமாற்றியுள்ளார். ஷூட்டிங் ஸ்பாட் உட்படப் பல இடங்களுக்கு ரஜினியை காண அழைத்துச் செல்வதாகக் சொல்லி ஏமாற்றி இருக்கிறார் ரஜினி பழனி ரசிகர்களை அழைத்துச் செல்லும் வழியில் பல பேரிடம் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றியிருக்கிறார். ரஜினி ஷூட்டிங் பார்க்க ரூ.2500, ரஜினியுடன் போட்டோ எடுக்க ரூ.5,000 என ரசிகர்களிடம் ஆசைவார்த்தை கூறி மோசடியில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

இந்தநிலையில் இதுவரை ரஜினி ரசிகர்களிடம் இந்த மோசடி நபர் ரூ.50 லட்சம் வரை மோசடி செய்ததாக ரசிகர்கள் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.