நகை பையை மாற்றி எடுத்து சென்ற பயணி...! 15 நிமிடத்தில்  கண்டுபிடித்த ரயில்வே போலீஸ்..! 

மதுரை ரயில் நிலையத்தில் 15 பவுன் நகையை தவறுதலாக எடுத்து சென்ற சக பயணியை வெறும்15 நிமிடத்தில் விரைந்து சென்று பிடித்தனர் ரயில்வே போலீசார்.

இன்று அதிகாலை ஒரு மணியளவில் கோவை செல்லும் ரயிலுக்காக ரஞ்சித் என்ற நபர் ரயில் நிலையத்தில் காத்திருந்தார். அப்போது மற்றொரு ரயிலில் இருந்து இறங்கி வந்த ஒரு பயணி தவறுதலாக ரஞ்சித்தின் பையை எடுத்து சென்றுள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து உணர்ந்த ரஞ்சித் தனது பையை காணவில்லை என ரயில்வே போலீசாரிடம் புகார் தெரிவிக்க, விரைந்து விசாரணை மேற்கொண்டது ரயில்வே போலீசார்.

காணாமல் போன 15 நிமிடத்திலேயே சிசிடிவி கேமரா முதற்கொண்டு அனைத்தையும் ஆராய்ந்து பையை மாற்றி எடுத்து சென்ற சக பயணியை பிடித்தனர். 

பின்னர் அவரை விசாரித்தபோது தான் தெரியவந்தது..பையை  தெரியாமல் எடுத்து சென்றதாகவும் அதைப்போன்றே, அவர் கையில் வேறு ஒரு பையை வைத்து உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அவர் எடுத்துச் சென்ற அந்த பையில்15 சவரன் நகையும் முக்கியமான சில ஆவணங்களும் இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது வரை சேர்த்து வைத்து இருந்த 15 சவரன் நகை காணாமல் போன அந்த சிறிய நேரத்தில் பதறிப்போன ரஞ்சித்துக்கு ரயில்வே போலீசார் மீட்டு தந்த அவரது பையை கண்ட பிறகுதான் பெருமூச்சு விட்டுள்ளார். மேலும் ரயில்வே போலீசாருக்கு அவரது நன்றியையும் தெரிவித்து உள்ளார் ரஞ்சித் இந்த சம்பவத்தால் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.