திருச்சி அருகே பஞ்சாப் நேஷனல் வங்கியில் பலகோடி ரூபாய் ரொக்கம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி மாவட்டம் சமயபுரம் டோல்கேட் அருகில் உள்ள பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி செயல்பட்டு வருகிறது. வழக்கம் போல இன்று காலை ஊழியர்கள் வங்கியை திறந்த போது லாக்கர் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே இந்த சம்பவம் தொடர்பாக வங்கி மேலாளர் மற்றும் காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

 

முதற்கட்ட விசாரணையில் நேற்று இரவு வங்கியில் புகுந்த மர்மநபர்கள் லாக்கரை உடைத்து பல கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வங்கி சுவரை கேஸ் வெல்டிங் மிஷினை கொண்டு துளையிட்டு லாக்கரை உடைத்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதில் தனி நபர் லாக்கர்கள் 5 உடைக்கப்பட்டுள்ளன. 

முகமுடி அணிந்த நபர்கள் கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. கொள்ளையர்கள் விட்டுச் சென்ற கேஸ் வெல்டிங் மிஷின், சிலிண்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.