புதுக்கோட்டையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளையில் ஈடுபட்டு மாயமானதாக கூறப்பட்ட அலுவலக உதவியாளர் மாரிமுத்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர் திட்டமிட்டு அடித்து கொலை செய்யப்பட்டு கடலில் வீசியுள்ளது தெரியவந்துள்ளது.

புதுக்கோட்டை பழைய நகராட்சி அலுவலகத்துக்கு எதிர்புறம் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் திருகட்டளையை சேர்ந்த மாரிமுத்து (42) அலுவலக உதவியாளராக 12 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். அதிகாரிகளுக்கு தேவையான வேலைகளை உடனடியாக செய்து முடிப்பதால் வங்கியில் மேலாளர் போல வலம் வந்துள்ளார். மேலும் வங்கியின் லாக்கர் சாவியும் அவரிடமே இருந்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் கடந்த 28-ம் தேதி வீட்டை வீட்டு வெளியேறிய மாரிமுத்து வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரது மனைவி ராணி, கணேஷ் நகர் ஆகியோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கடந்த 29-ம் தேதி வல்லத்திராக்கோட்டை பகுதியில் மாரிமுத்துவின் கார் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. அதேவேளையில், மாரிமுத்து அவர் வேலை பார்த்த வங்கியில் 1,500 நகைகளை கொள்ளையடித்துவிட்டு சென்று இருக்கலாம் என்ற தகவல் வெளியானது. இதனையடுத்து நகை அடகு வைத்த விவசாயிகள் பலர் வங்கியின் முன் குவிந்தனர். அப்போது நகைகள் ஏதும் மாயமாகவில்லை என வங்கியின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 

இந்நிலையில் வங்கி கொள்ளையில் தொடர்புடையதாக கூறப்பட்ட மாரிமுத்து மணமேல்குடி அருகே கார் எரிந்த நிலையில் இருந்தது. அந்த காருக்குள் கவரிங் நகைகள் தீயில் எரிந்தது போல கண்டெடுக்கப்பட்டன. கொள்ளை தொடர்பாக 3 தனிப்படைகள் அமைத்து மாரிமுத்துவை தீவிரமாக தேடி வந்தனர். இதனையடுத்து 3-ம் தேதி மணமேல்குடி கோடியக்கரை கடலில் மாரிமுத்து சடலமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. இதுவரை கொள்ளை நடைபெறவில்லை என்று கூறி வந்த பஞ்சாப் நேஷனல் வங்கி, 6 நாட்கள் கழித்து தங்கள் வங்கி லாக்கரில் இருந்து 13 கிலோ 750 கிராம் தங்கம் நகைகளை மாரிமுத்து எடுத்துக் கொண்டு மாயமாகி இருப்பதாக புகார் அளிக்கப்பட்டது. 

இந்நிலையில் மாரிமுத்துவும் கொல்லப்பட்டு விட்டதால் உண்மையில் தங்க நகைகளை எடுத்து சென்றது யார் ? என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். பஞ்சாப் நேஷனல் வங்கியின் கணக்கு வழக்குகள் அடங்கிய கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க் காணாமல் போனதாக வங்கி அதிகாரிகள் தற்பொழுது புகார் அளித்துள்ளனர். மேலும் வங்கியில் இருந்த சிசிடிவி காட்சிகள் அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.