புதுக்கோட்டை அருகே 3 வயது சிறுமி கழுத்தறுபட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பெண் மந்திரவாதி கைது செய்யப்பட்டுள்ளார். தனது மாந்திரீக சக்தி அதிகரிப்பதற்காக சிறுமியை நரபலி கொடுத்ததாக அவர், வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அடுத்த குரும்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது மனைவி முருகாயி. இவர்களுக்கு 3 வயதில் ஷாலினி என்ற மகள் இருந்தாள்.

கடந்த 26ம் தேதி மாலை வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஷாலி, தடீரென மாயமானார். அவரை, பெற்றோர் பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் இல்லை. பின்னர், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள காட்டுப் பகுதியில் கழுத்தறுபட்ட நிலையில் சிறுமி சடலமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியில் கதறி அழுதனர்.

தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பிதவு செய்து விசாரித்தனர். இதற்கிடையில், சிறுமியின் இறப்பு குறித்து, அதே பகுதியை சேர்ந்த பெண் மந்திரவாதி சின்னப்பொண்ணு என்பவரைப் பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். 

அதில், தனது மாந்திரீக சக்தி அதிகரிப்பதற்காக சிறுமியை நரபலி கொடுத்தேன் என அவர் வாக்குமூலம் கொடுத்ததாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து சின்னபொண்ணுவிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.