புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அருகே உள்ள கரிக்கலாம்பாக்கம் மாஞ்சாலை வீதியை சேர்ந்தவர் அசோக் கட்டிட தொழிலாளி. இவருக்கும் கிருஷ்ணவேணி என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவர்களுக்கு ஜெயஸ்ரீ என்ற மகளும், ஜெயகணேஷ் என்ற மகனும் உள்ளனர். கிருஷ்ணவேணி மீண்டும் கர்ப்பமாக இருந்தார்.

இந்நிலையில் கடந்த 19–ந் தேதி மாலை திடீரென்று அவர் மாயமானார். அவரை உறவினர்கள் தேடியபோது பாகூர் சாலையில் செங்கன்ஓடை பகுதியில் உள்ள காளி கோவில் அருகே சேலையால் கைகள் கட்டப்பட்டு, கழுத்தை அறுத்து கொடூரமான முறையில் கிருஷ்ணவேணி கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.

கிருஷ்ணவேணி அணிந்திருந்த தாலிச்சங்கிலி, தோடு ஆகியவை மாயமாகி இருந்தன. அந்த இடத்தில் எலுமிச்சம்பழம், குங்குமம் ஆகியவை சிதறிக்கிடந்தன. கொலை சம்பவம் நடந்த பகுதி மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதி ஆகும். பெரும்பாலும் அந்த இடத்துக்கு யாரும் செல்வதில்லை. அப்படி இருக்கும்போது கிருஷ்ணவேணி அங்கு கொலை செய்யப்பட்டு கிடந்தது குறித்து முதன் முதலில் தகவல் தெரிவித்த அவரது கணவர் அசோக் மீது போலீசுக்கு சந்தேகத்தை வலுப்படுத்தியது.

அவரிடம் போலீசார் அதிரடியாக விசாரித்ததில் அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது.அசோக்கின் பக்கத்து வீட்டில் குடியிருந்து வந்த கோவிந்தராஜ் தான் இந்த கொடூர செயலில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. அதாவது, அசோக்கின் தங்கைக்கு நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்து வந்துள்ளது.

இதுபற்றி அறிந்து பக்கத்து வீட்டை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பகுதியில் உள்ள அய்யனார் கோவிலுக்கு அசோக்கின் குடும்பத்தினரை அழைத்துச் சென்று தோ‌ஷம் கழித்துள்ளார். இதையடுத்து சில மாதங்களில் கோவிந்தராஜின் ஏற்பாட்டில் அசோக்கின் தங்கைக்கு திருமணம் நடந்தது.

இதனால் அவரை அசோக் குடும்பத்தினர் முழுமையாக நம்பினர். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கோவிந்தராஜ் அசோக்கின் வீட்டில் ஏவல், பில்லி சூனியம், செய்வினை வைக்கப்பட்டுள்ளதாக கூறி, அவரே தகடு பதித்து மறைத்து வைத்து, அதை எடுத்துள்ளார்.

மேலும் கிருஷ்ணவேணியிடம் உனது கணவர் உன்னைவிட்டு பிரிந்துவிடுவார், எனவே பில்லிசூனியம் எடுக்க வேண்டும் என கூறி அவரை ஆளிலில்லா பகுதிக்கு அழைத்துவந்து கொலை செய்து அவர் அணிந்திருந்த நகைகளை பறித்துச் சென்றார்.

பக்கத்து வீட்டில் நட்பாக பழகி, பில்லி சூனியம் இருப்பதாக கூறி நம்ப வைத்து குடும்பத்தையே ஆட்டிப்படைத்து முடிவில் நகை, பணத்துக்கு ஆசைப்பட்டு இளம் பெண் ஒருவரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.