மதுரை மாவட்டம் சிலைமானில் சவுந்தரபாண்டி நகர் அருகே இருக்கிறது நரிக்குறவர் காலனி. இங்கு நூற்றுக்கணக்கான நரிக்குறவர் இன மக்கள் வசிக்கின்றனர். அந்த பகுதியில் இருக்கும் முதியவர்கள் பெரும்பாலானோர் நள்ளிரவில் வெளியில் படுத்து தூங்குவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

கடந்த 22ம் தேதி நள்ளிரவு ஒரு மணி அளவில் ஒரு வீட்டின் வெளியில் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது அந்த பக்கமாக குடிபோதையில் வந்த இரண்டு இளைஞர்கள் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். இதில் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி அவர்களை எதிர்த்துப் போராடி கூச்சல் போட்டிருக்கிறார். உடனே அவர்கள் இருவரும் மூதாட்டியை தாக்கி தப்பி ஓடிவிட்டனர். இதில் மூதாட்டியின் இடது கை எலும்பு முறிந்து இருக்கிறது.

இதையடுத்து அவரது சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் மூதாட்டியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் சிலைமான் காவல் நிலையத்தில் இது சம்பந்தமாக புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் அந்த பகுதிக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான் மேலும் சில மூதாட்டிகள் இந்த பாதிப்பில் உள்ளாகியிருப்பது தெரியவந்தது.

அவர்கள் அளித்த தகவலின்படி நள்ளிரவு 1 மணி முதல் 2 மணிக்குள் குடிபோதையில் இரண்டு இளைஞர்கள் ஆட்டோவில் நரிக்குறவர் காலணியை வலம் வந்துள்ளனர். வீட்டின் வெளியில் தனியாக படுத்து இருக்கும் மூதாட்டிகளை குறிவைக்கும் அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பி இருக்கின்றனர். கிராமத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நேரத்தை தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி அந்த வாலிபர்கள் இந்த செயலில் ஈடுபட்டு இருக்கின்றனர். 

இதுவரை மூதாட்டிகள் சிலர் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் புகார் அளிக்க தயங்கி இருக்கிறார்கள். தற்போது இந்த சம்பவம் வெளிவந்ததால் அவர்கள் முன் வந்து தெரிவித்திருக்கின்றனர். இதனால் அந்த பகுதியினரிடையே ஒருவித அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

இது சம்பந்தமாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து இரண்டு இளைஞர்களையும் தேடி வருகின்றனர். மூதாட்டிகளை குறிவைத்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் சைக்கோ வாலிபர்களால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.