சேலம் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே இருக்கும் வணிக வளாகம் கட்டிடத்தில் அப்பகுதியை சேர்ந்த அங்கப்பன்(85) என்கிற முதியவர் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். நேற்றிரவு அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் முதியவரின் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்துவிட்டு அவரது சட்டையில் இருந்த பணத்தை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று இருக்கிறான்.

அதிகாலையில் அந்த வழியாக சென்றவர்கள் முதியவர் கொல்லப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவலர்கள் அங்கப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றுள்ளனர். கொலை வழக்கு பதிவு செய்த காவலர்கள் பேருந்து நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது இது தொடர்பான காட்சிகள் பதிவாகி இருக்கிறது.

இதேபோன்று சேலம் பகுதியில் நேற்று டயர் கடை ஒன்றில் உறங்கிக்கொண்டிருந்த ஒரு முதியவரின் தலையில் கல்லை போட்டு மர்ம நபர் கொலை செய்திருக்கிறார். இதுதொடர்பான காட்சிகளும் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது. அது குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சேலத்தில் தனியாக உறங்கிக் கொண்டிருக்கும் முதியவர்களை நோட்டமிட்டு கொலைசெய்யும் மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. மர்ம நபரை விரைந்து பிடிக்க வேண்டுமென காவல்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.