ஆம்பூரில் இளம்பெண்களை விஐபிகளுக்கு சப்ளை செய்து விபச்சார புரோக்கரமாக செயல்பட்டு வந்த அதிமுகவைச் சேர்ந்த பிரேமா என்பவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த உமராபாத் பகுதியில் உள்ள விடுதிகள் மற்றும் தனி வீடுகளில் வைத்து வெளிமாநிலத்தில் இருந்து அழகான இளம்பெண்களை அழைத்துவந்து விஐபிகளுக்கு பெண்களை சப்ளை செய்து கொண்டு விபச்சாரம் செய்கிறார்கள் என்கிற தகவல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதோடு ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், வேலூர், குடியாத்தம் பகுதிகளுக்கும் பெண்களை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

இதுப்பற்றிய தகவல் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு சென்றது. அதனை தொடர்ந்து போலீசார் ரகசியமாக விசாரித்தபோது, அதே பகுதியை சேர்ந்தவரும், அதிமுகவின் மாவட்ட பிரதிநிதியாகவும் உள்ள உமராபாத் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவரான பிரேமா என்பவர் தான், இளம்பெண்களை அழைத்து வந்து தொழில் செய்கிறார் என்பது தெரிவந்தது. இதனையடுத்து, பக்காவாக ஸ்கெட்ச் போட்டு பிரேமாவை ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர். அவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், அவரிடமிருந்து பெங்களூருவைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமியை மீட்டுத் திருப்பத்தூர் காப்பகத்தில் தங்கவைத்துள்ளனர்.

இந்நிலையில், அதிமுகவிலிருந்து பிரேமா நீக்கம் செய்யப்படுவதாக ஓபிஎஸ், இபிஎஸ் அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டு அறிக்கையில்;- கழகத்தின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கு முரணான வகையிலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், வேலூர் மேற்கு மாவட்டம் பேரணாம்பட்டு ஒன்றியத்தைச் சேர்ந்த திருமதி.பிரேமா, (பேரணாம்பட்டு ஒன்றியக் கழக மாவட்டப் பிரநிதி) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் அவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது எனக் கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.