கள்ளக்காதல் தகராறில் மலர் கொல்லப்பட்டாரா அல்லது பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் கொலை நடந்ததா என விசாரித்து வருகின்றனர்.  மேஸ்திரி கரிகாலனை கைது செய்யும் பட்சத்தில் உண்மைகள் வெளியாக வாய்ப்புள்ளது. 

செங்கல்பட்டில் உள்ள தனியார் பள்ளி வகுப்பறையில் கழுத்தறுத்து பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் படுகொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசாரை விசாரணையை தொடங்கியுள்ளனர். 

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே, பிரபல தனியார் பெண்கள் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி உள்ளது. 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 1,500 மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமையாசிரியர், ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த பள்ளியை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில், 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மேல் தளத்தில் பெண் ஒருவர் ஆடைகள் கலைந்த நிலையில் கழுத்தறுத்து ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்டிருப்பதை கண்டு சக தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், கொலை செய்யப்பட்டவர் விழுப்புரம் மாவட்டம், காரணை கிராமத்தை சேர்ந்த மலர் (40) என்பதும், இவர் இந்த பள்ளி கட்டிடத்தின் முதல் தளத்தில் தங்கி கொத்தனார் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. அங்கு மேஸ்திரியாக வேலை செய்து வந்த கரிகாலன் திடீரென தலைமறைவாகியுள்ளதால் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. கள்ளக்காதல் தகராறில் மலர் கொல்லப்பட்டாரா அல்லது பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் கொலை நடந்ததா என விசாரித்து வருகின்றனர். மேஸ்திரி கரிகாலனை கைது செய்யும் பட்சத்தில் உண்மைகள் வெளியாக வாய்ப்புள்ளது.