இந்தியாவை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் கொரோனா வைரஸ் நோயின் தீவிரம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் 14,378 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 480 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக மக்கள் சமூகவிலகலை கடைபிடிக்க வலியுறுத்தி நாடு முழுவதும் அமலில் இருந்த 21 நாட்கள் ஊரடங்கு மேலும் 19 நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி மே 3ம் தேதி வரை இந்தியாவில் தேசிய ஊரடங்கு அமலில் இருக்கும்.  ஊரடங்கு காலத்தில் கடைகள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள், பொது போக்குவரத்து, முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் முடக்கப்பட்டு மக்கள் ஒன்றாக திரள்வதற்கு அரசு தடை விதித்திருக்கிறது.

இதன் காரணமாக நாடு முழுவதும் நடைபெற இருந்த பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் போன்றவை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் இருக்கும் கோவில்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் அனைத்தும் மூடப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் இருக்கும் வழிபாட்டு தலங்களையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. பங்குனி, சித்திரை மாதங்களில் நடைபெற இருந்த கோவில் திருவிழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வலியுறுத்தி இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதனிடையே தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ம் தேதி அன்று ஊரடங்கு விதிகளை மீறி கோவில்களில் பக்தர்களை அனுமதித்தாக சேலம் மாவட்டத்தில் அர்ச்சகர்கள் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது. சேலம் டவுண் பகுதியில் இருக்கும் ராஜகணபதி கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு அர்ச்சகர்கள் சிறப்பு பூஜை செய்தபோது சில பக்தர்கள் வரிசையில் நின்று சாமி கும்பிட்டனர். இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரியவே கோவில் அர்ச்சகர்கள் ராஜா, விஸ்வநாதன் உள்பட 10 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதே போல சாஸ்தா நகர் அய்யப்பன் கோவிலிலும் பக்தர்கள் முன்னிலையில் சிறப்பு பூஜை  நடக்கவே கோவில் அர்ச்சகர்கள் விஸ்வநாதன், சீத்தாராமன், ஸ்ரீதர்பட்டு, பிரேமிகன் வெங்கடாசலம் உள்பட 14 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். புகார் தொடர்பாக அர்ச்சகர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுதலை ஆகி இருக்கின்றனர்.