வேறு ஒருவருடன் குடும்பம் நடத்திய கர்ப்பிணிப் பெண்ணை கணவர் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உசிலம்பட்டி அருகே உள்ள வடிவேல்கரையைச் சேர்ந்த போஸ் மகன் வடிவேல் மனைவி அம்சத். இவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு கல்யாணமானது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் செக்கானூரணி அருகே உள்ள தேங்கல்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மதன் என்பவருடன் அம்சத்துக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த நாளடைவில் இது கள்ளக் காதலாக மாறியது.

விவரம் தெரியவந்ததும் வடிவேல், அம்சத்தை கண்டித்தார். இதனால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இருப்பினும் கள்ளத் தொடர்பை விட விரும்பாத அம்சத் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவர் மற்றும் குழந்தைகளை பிரிந்து கள்ளக் காதலன் மதனுடன் அம்சத் சென்று விட்டார். அவர்கள் செக்கானூரணி பசும் பொன் தெருவில் தனி வீட்டில் வசித்து வந்தனர்.

மனைவி பிரிந்து சென்றதோடு, கள்ளக் காதலனோடு தனிக் குடித்தனம் நடத்துவது வடிவேலுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. நேற்று நள்ளிரவு 12.00 மணிக்கு உறவினருடன், அம்சத் வீட்டிற்கு சென்றார். வீட்டில் அம்சத் மற்றும் மதன் உறங்கிக் கொண்டிருந்தனர். அவர்களை வடிவேல் சரமாரியாக அரிவாளால் வெறி தீர வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த மனைவி அம்சத் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னர் வடிவேல் தப்பியோடி விட்டார்.

பலத்த காயமடைந்த மதன் அலறல் குரல் எழுப்பியதை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். அவர்கள் தத்தளித்துக்கொண்டிருந்த மதனை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். செக்கானூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கொலை செய்த வடிவேலை இன்று காலை கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட அம்சத் 4 மாத கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது.