தமிழகத்தில் சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை ஐஜி பொன்மணிக்கவேல் தலைமையில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவை அமைத்து, 2017ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் தேதி உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம்.

கடத்தப்பட்ட சிலைகள் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருப்பதால் அவற்றை மீட்க வசதியாக சிபிஐக்கு நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் மாற்றுவதாகத் தமிழக அரசு அறிவித்திருந்தது. இதைதொடர்ந்து, சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றிக் கடந்த ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையை எதிர்த்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், "அரசியல்வாதிகள், முக்கிய நபர்கள், உயர் அதிகாரிகளைக் காப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே இதற்குத் தடை விதிக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டது.

இத்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு, தமிழக அரசின் இந்த அரசாணைக்குக் கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். இந்நிலையில் சிபிஐ அமைப்பும் சிலைக் கடத்தல் வழக்குகளை தங்களால் விசாரிக்க இயலாது என இந்த வழக்கில் தெரிவித்திருந்தது.

இந்த வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு  விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசாணை என்ற பெயரில் பல வர்ணங்களைப் பூசி தமிழக அரசு உண்மையை மறைக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், ஐஜி பொன்மாணிக்கவேல் பணி ஓய்வு பெற்றாலும், சிலைக் கடத்தல் வழக்குகளை அவரே விசாரிக்கும் வகையில் ஒரு வருடத்திற்கு சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக அவர் நியமிக்கப்படுவதாகத் தீர்ப்பளித்தனர்.

"ஐஜி பொன்மாணிக்கவேலே சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் குழுவிற்கு தலைவராகச் செயல்படுவார். அவருடன் இந்த வழக்குகளில் பணியாற்றிய அதிகாரிகளை அரசு மாற்றக் கூடாது. ஐஜி பொன்மாணிக்கவேல் விசாரணைக்கு சிபிஐ போதுமான ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதற்கான அரசாணையைத் தமிழக அரசு வெளியிட வேண்டும். சிலைக் கடத்தல் தொடர்பான விசாரணை அறிக்கையைத் தமிழக அரசிடம் தாக்கல் செய்ய வேண்டாம். நீதிமன்றில் தாக்கல் செய்யலாம்" என்று தங்களுடைய தீர்ப்பில் தெரிவித்துள்ளனர் நீதிபதிகள்.