சென்னை தாம்பரம் அருகே துப்பாக்கிசூட்டில் படுகாயமடைந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் முகேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை வண்டலூரை அடுத்த வேங்கடமங்கலத்தைச் சேர்ந்த முகேஷ் குமார் என்பவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இன்று அவரது பெற்றோர் வேலை நிமித்தமாக வெளியில் சென்று விடவே பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த தனது நண்பர்களான உதயா மற்றும் விஜய் ஆகியோருடன் முகேஷ் குமார் வீட்டில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அவரது வீட்டில் இருந்து குண்டு வெடித்தது போல அதிக சத்தம் கேட்கவே அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது, நெற்றியில் குண்டு பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் முகேஷ் குமார் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே ஆம்புலன்ஸ் வரழைக்கப்பட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். 

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி முகேஷ் குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் அவரது நண்பர் உதயாவை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துப்பாக்கியால் சுட்ட விஜய் தலைமறைவாக இருந்து வருகிறார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் வீடியோ கேம் விளையாடுவது தொடர்பான மோதலின் போது  முகேஷ் துப்பாக்கியால் சுடப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து முகேஷை துப்பாக்கியால் சுட்டது யார்? துப்பாக்கி கிடைத்தது எப்படி என போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.