நாட்டியே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த கும்பலிடம் மேலும் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொள்ளாச்சியில் வசித்து வரும் திருநாவுக்கரசு என்பவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் முகநூலில் பழகினார். கனிவோடு பழகிய திருநாவுக்கரசு மீது நன்மதிப்பு ஏற்பட்டதால், அந்த பெண் அவரோடு நெருங்கிப் பழகத் தொடங்கியுள்ளார். இதைத்தொடர்ந்து தனது நண்பர்களிடம் அறிமுகம் செய்து வைப்பதாக கூறிய திருநாவுக்கரசு, அந்த பெண்ணை கடந்த மாதம் 12-ம் தேதி காரில் அழைத்துச் சென்றதாக தெரிகிறது. ஊஞ்சபேலம்பட்டி என்ற இடத்தில் காரில் ஏறிக் கொண்ட நண்பர்கள், அந்த பெண்ணை தங்களின் செல்போனில் ஆபாசமாக படம்பிடித்து அதைவைத்து அப்பெண்ணிடம் இருந்த நகையை மிரட்டி வாங்கியதாக கூறப்படுகிறது. 

உடனே இது தொடர்பாக அந்த பெண் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதில்  தன்னை சில இளைஞர்கள் பாலியல் வன்முறை செய்து அதை வீடியோ எடுத்து மிரட்டி வருகிறார்கள் என்று புகார் அளித்து இருந்தார். இது தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த தனிப்படை விசாரணையில் சபரி, வசந்தகுமார், சதீஷ் குமார் ஆகிய 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். ஆனால் முக்கிய குற்றவாளிவான திருநாவுக்கரசு மட்டும் தலைமறைவாக இருந்து வந்தார். அதன்பின் திமிராக வீடியோ வெளியிட்ட திருநாவுக்கரசு, தனது குற்றங்களுக்கு பின் பலர் இருப்பதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதனையடுத்து திருநாவுக்கரசை திருப்பதியில் வைத்து போலீசார் கைது செய்தனர். 

இந்நிலையில் இந்த கும்பலால் மேலும் பல இளம்பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பல வருடங்களாக இந்த கும்பல் பெண்களை காதல் செய்வதாக ஆசைவார்த்தி காட்டி, பின் பாலியல் தொல்லைகொடுத்து மிரட்டியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே பொள்ளாச்சி பகுதியில் ஏதேனும் பெண்கள், கும்பலால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டிருந்தால் தைரியமாக புகார் கொடுக்கலாம் என போலீசார் தரப்பில் கேட்டுக்கொண்டுள்ளனர். ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக யாரும் புகார் தெரிவிக்க முன்வரவில்லை. 

இதனிடையே தன்னை நம்பி வந்த ஒரு இளம்பெண்ணை, இந்த கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ எடுப்பது போலவான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் மற்றும் பிரபலங்கள் கூறி வருகின்றனர். மேலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் இது தொடர்பான அறிக்கை வெளியிட்டுள்ளார்.