சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தையும் மகனும் அடித்துக் கொல்லப்பட்ட நிலையில் மீண்டும் ஒருவர் சித்திரவதை நிகழ்ந்துள்ளது காவல்துறையை சர்ச்சையில் சிக்க வைத்துள்ளது.
 
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த பென்னிக்ஸ், அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கொரோனா ஊரடங்கி மீறி செல்போன் கடை நடத்தியதாக கூறி போலீசார் அவர்களை காவல்நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கியதில், இருவரும் உயிரிழந்தனர். இந்த வழக்கில் சாத்தான்குளம் போலீஸார் பலர் கைது செய்யப்பட்ட நிலையில், இப்போது மீண்டும் ஒரு சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 

சாத்தான்குளம் தைக்கா தெருவை சேர்ந்தவர் மார்ட்டின். இவர் மீது சாத்தான்குளம் காவல்நிலையத்தில் சாதாரண வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த 23 ம் தேதி, சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் சேவியர், உதவி ஆய்வாளர் ராஜா ஆகியோர் மார்ட்டினை அவரது வீட்டில் வைத்து அடித்து வாகனத்தில் ஏற்றி சென்றுள்ளனர். பின்னர் சாத்தான்குளம் காவலர் குடியிருப்புக்கு கொண்டு சென்று இரவு முழுவதும் அவரை அடித்துள்ளதாக கூறப்படுகிறது. பலத்த காயமடைந்ததால், மார்ட்டின் உடல்நிலை மோசமானதை அடுத்து, 24 ம் தேதி பிற்பகல் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 5 நாட்கள் சட்டத்திற்கு புறம்பாக காவல்துறை கட்டுப்பாட்டில் வைத்திருந்து நேற்று இரவு 7 மணியளவில் திருவைகுண்டம் குற்றவியல் நீதித் துறை நடுவர் முன்பு மார்ட்டினை ஆஜர்படுத்தியுள்ளனர். இதுகுறித்து விசாரித்து பதிவு செய்த நீதித்துறை நடுவர், மார்ட்டினை சொந்த பிணையில் விடுவித்தார். தற்போது வரை மார்ட்டின் தொடர்ந்து காவல்துறையால் மிரட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
 
இதுகுறித்து தனது முகநூலில் பதிவிட்டுள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் சந்தன சேகர், மார்ட்டினை சட்டவிரோதமாக அடித்து துன்புறுத்திய சாத்தான்குளம் காவல் நிலைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மார்ட்டினுக்கு உரிய நிவாரணத்தினை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில் மார்ட்டினின் மனைவி சரோஜா கூறுகையில், ’’விசாரணைக்கு அழைத்து சென்ற என் கணவரை, அடிச்சு சித்திரவதைப்படுத்துகிறார்கள்.  அவரால் சிறுநீர் போன்ற உபாதைகளை கழிக்க முடியாமல் தவிக்கிறார். எனக்கு நீதி கிடைக்க வேண்டும். என் கணவரின் நிலை ஜெயராஜ், பென்னிக்ஸ் போல ஆகிவிடக்கூடாது’’ என வேதனை தெரிவிக்கிறார்.