மனைவியுடனான தவறான உறவை தட்டிக் கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததாக உதவி ஆய்வாளர் மீதும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில்  சென்னை கே.கே. நகரை சேர்ந்த ஜனார்த்தனன் புகாரளித்துள்ளார். ஜனார்த்தனன், நர்மதா தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சவூதி அரேபியாவில் பணிபுரியும் ஜனார்த்தனன் வெளிநாடு வாழ் இந்தியர். கடந்த ஆண்டு மே மாதம் சவூதி அரேபியாவில் இருந்து ஜனார்த்தனன் சென்னை திரும்பினார். இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் வந்த ஜனார்த்தனன், தனது மனைவி நர்மதா, திருநின்றவூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராஜேஷ் ஆகியோர் மீது புகார் அளித்தார்.

அந்த புகாரில், நர்மதாவுக்கும் திருநின்றவூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராஜேஷ் என்பவருக்கும், தவறான உறவு இருப்பதாகவும், அதை தட்டிக் கேட்டபோது காவல் உதவி ஆய்வாளர் ராஜேஷ் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ஜனார்த்தனன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நர்மதாவும், உதவி ஆய்வாளர் ராஜேஸும் தனிமையில் சந்தித்தபோது அவர்களை பின் தொடர்ந்து புகைப்படம் எடுத்ததாகவும், இதனை பார்த்த உதவி ஆய்வாளர் ராஜேஷ் தன்னை மிகக் கடுமையாக தாக்கியதாகவும் ஜனார்த்தனன் கூறியுள்ளார். தனது குழந்தைகள் பெயரில் வாங்கிய 5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை உதவி ஆய்வாளருடன் சேர்ந்து நர்மதா அபகரித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

காவல்துறை எஸ்.ஐ மீதே கள்ளக்காதல் குற்றச்சாட்டு புகார் கொடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.