சென்னையை அடுத்த புழலில், நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் தனது மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த போலீஸ்காரர், தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை புதுவண்ணாரப்பேட்டை காவல் ஸ்டேஷனில்  காவலராகப் பணியாற்றியவர் நரேஷ். அவரது மனைவி ஜெயஸ்ரீ. அந்த தம்பதிக்கு 7 வயதில் மகன் உள்ளார். சில ஆண்டுகளாக செம்பியத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் அவர்கள் வசித்து வந்தனர். மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து நரேஷ் அடிக்கடி தனது மனைவியோடு சண்டையிட்டு வந்ததாகக் சொல்லப்படுகிறது.

இதன் காரணமாகவும், மகனின் படிப்பு பாதிக்கப்படுவதால், புழல் திருமால் நகரில் உள்ள ஜெயஸ்ரீயின் தாயாரின் வீட்டிற்கு அவர்கள் குடிபெயந்ததாக சொல்லப்படுகிறது. ஜெயஸ்ரீயின் தாயார் குடும்பத்தினர் கீழ் வீட்டிலும், ஜெயஸ்ரீயும், நரேசும் மேல் வீட்டிலும் வசித்து வந்துள்ளனர்.

அங்கும் கணவன் மனைவி இடையே தொடர்ந்து  தினமும் சண்டை நடந்துள்ளது, மகனை அழைத்துக் கொண்டு பெரம்பூர் அகரத்தில் உள்ள தம்பி சரவணனின் வீட்டிற்கு ஜெயஸ்ரீ சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை அங்கு சென்ற நரேஷ், மனைவியை சமாதானப்படுத்தி மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

இரவில் மகன் வேறொரு அறையில் உறங்கிக் கொண்டிருந்த சமயத்தில், கணவன் மனைவி இடையே மீண்டும் மீண்டும் வாய் சண்டை ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த நரேஷ் காய்கறி வெட்டும் கத்தியால் மனைவியின் கழுத்து, வயிற்றில் குத்தி கிழித்துள்ளார். இதனால் ஜெயஸ்ரீ ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த மனைவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

வீட்டைச் சுற்றிலும் ஜெயஸ்ரீயின் உறவினர்கள் அதிகமாக இருப்பதால் நம்மை சும்மா விட மாட்டார்கள், அடித்தே கொன்று விடுவார்கள் என்று அஞ்சிய நரேஷ், சேலையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.வெகுநேரமாக வீட்டில் சத்தம் இல்லாததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் ஜன்னல் வழியாக பார்த்து அதிர்ந்து போன அவர்கள் உடனடியாக புழல் போலீசாருக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். 

விரைந்து வந்த போலீசார் உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த கதவின் தாழ்ப்பாளை உடைத்து உள்ளே சென்று இருவரது சடலங்களையும் மீட்டு பிரேதபரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவரது செல்போன்களையும் கைப்பற்றியுள்ள போலீசார், திடீரென இந்த கோரச் சம்பவம் நிகழ்வதற்கு என்ன காரணம் என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.