தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 16 வயது சிறுமியான இவர் அங்கிருக்கும் ஒரு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இதனிடையே அவரை காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக குற்றம் சாற்றி இருக்கிறார். இதுகுறித்து சிறுமியின் சார்பாக மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த நான் கோவையில் பெற்றோருடன் வசித்து வருகிறேன். அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறேன். கடந்த 3 ஆண்டுக்கு முன்பு சொந்த ஊரில் வீட்டில் தனியாக இருந்தபோது தர்மபுரி சேஷம்பட்டியை சேர்ந்த உறவினர் வெற்றிவேல் (27) திருமண ஆசை காட்டி என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த நிலையில் போலீஸ்காரராக பணியில் சேர்ந்த அவர் கோவையில் போக்குவரத்து பிரிவில் பணிபுரிந்து வருகிறார். அங்குள்ள வீட்டிலும் திருமண ஆசை காட்டி என்னிடம் பலாத்காரத்தில் ஈடுபட்டார். 6 மாதங்களுக்கு முன்பு சேஷம்பட்டிக்கு வந்த அவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக தகவல் கிடைத்தது.

இதுதொடர்பாக எனது பெற்றோருடன் சென்று கேட்டபோது என்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறிவிட்டார். இதற்கு அவருடைய குடும்பத்தினரும் உடந்தையாக இருந்தனர். திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி என்னை ஏமாற்றிய போலீஸ்காரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார், வெற்றிவேலை அதிரடியாக கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறுமியை ஏமாற்றுவதற்கு உடந்தையாக இருந்ததாக வெற்றிவேலின் தாயார் மகேஸ்வரி(50), சகோதரர் பத்மநாபன்(29), உறவினர் சுரேஷ் ஆகியோர் மீதும் வழக்குபதியப்பட்டிருக்கிறது.