வசூல் ராஜா பட பாணியில் ப்ளூ டூத் மூலம் ராணுவ தேர்வு..! வட மாநில இளைஞர்கள் 29 பேர் சென்னையில் கைது
சென்னையில் நடைபெற்ற ராணுவ தேர்வில் ப்ளூ டூத் பயன்படுத்தி தேர்வெழுதிய அரியானா மாநிலத்தை சேர்ந்த 29 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் ராணுவ தேர்வு
நடிகர் கமல்ஹாசன் நடித்த வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் டாக்டருக்கான நுழைவுத்தேர்வில் காதில் ப்ளூ டூத் மாட்டிக்கொண்டு கமல்ஹாசன் தேர்வெழுதி மருத்துவராக தேர்வாகுவார். அதே போல ஒரு சம்பவம் தான் சென்னையில் நடைபெற்ற ராணுவ தேர்வின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள ராணுவ பள்ளியில் “Defence civilian Recruitment Group ‘C’ Exam” நேற்று காலை நடைபெற்றது. இந்த தேர்வில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மொத்தம் 1,728 நபர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள். இந்த தேர்வில் கலந்து கொண்ட ஒரு சிலர் மீது ராணுவ அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்ட்டதையடுத்து அந்த இளைஞர்களை சோதனை மேற்கொண்டனர். அப்போது அரியானா மாநிலத்தை சேர்ந்த சுமார் 29 நபர்கள் சிறிய அளவிலான ப்ளூடூத் டிவைஸ் பயன்படுத்தி தேர்வு மையத்துக்கு வெளியே இருக்கும் பெயர் தெரியாத நபர் உதவியுடன் வினாக்களை தெரிவித்து விடைகளை பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.
29 வட மாநில இளைஞர்கள் கைது
இது தொடர்பாக ராணுவ மருத்துவமனை சுபேதார் ஸ்ரீதர் தலைமையில் 10 ராணுவத்தினர் நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் மோசடி செய்து தேர்வு எழுதிய 29 பேர் மீதும் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் 29 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றம் செய்தவர்களின் ஆவணங்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய ப்ளூடூத் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து மோசடியில் ஈடுபட்ட நபர்களிடம் நந்தபாக்கம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஹரியானா மாநிலத்தில் உள்ள ஜிந்த் மற்றும் ஹிசார் பகுதியை சேர்ந்தவர்கள். தேர்வு எழுதுவதற்காக , டில்லியில் உள்ள ஏஜென்டு ஒருவர் மூலம் இந்த வகையான ப்ளூடூத் சாதனங்களை 10,000 முதல் 15,000 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்கியதாக தெரிவித்துள்ளனர். காதின் உள்ளே வைக்கப்பட்டால் தெரியாத அளவிலான வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சாதனம், சிறிய ஆண்டெனா கருவியுடன் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் கூறியுள்ளனர்.
ப்ளூ டூத் மூலம் தேர்வுக்கு பதில்
இதனையடுத்து நேற்று இரவு அந்த 29 பேரையும் சொந்த ஜாமினில் விடுவித்த போலீசார் கல்வி சான்று உள்ளிட்ட ஆவணங்களை பெற்றுக்கொண்டு இ்ன்று காலை மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளனர். ப்ளூடூத் மூலம் ராணுவ தேர்வெழுதி அரியானா மாநில இளைஞர்கள் மாட்டிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதே போன்று ரயில்வே உள்ளிட்ட்ட பல்வேறு மத்திய அரசின் தேர்வுகளில் மோசடி நடைபெற்றிருக்குமா என்ற சந்தேகம் காவல்துறையினருக்கு எழுந்துள்ளது. இதனையடுத்து இந்த பிரச்சனை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.