சென்னையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இளம் காதல் ஜோடியை போலீசார் கைது செய்தனர். இந்த காதல் ஜோடி செல்போன்களை பறித்து பர்மா பஜாரில் விற்றுவிட்டு இருவரும் போதைப் பொருள் வாங்கிப் பயன்படுத்தியதாகவும் தெரிகிறது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் அழகு நிலையம் நடத்தி வருபவர் பிரசன்னா, தேனாம் பேட்டையைச் சேர்ந்த இவர் திங்கள் கிழமை அன்று மாலை தனது தோழி ஒருவருடன் ஜி.என்.செட்டி சாலை ஓரம் நடந்து சென்றார்.

வலது கையில் செல்போனை வைத்துக் கொண்டு அவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, ஒரு பெண்ணுடன் ஹெல்மெட் அணிந்தபடி இருசக்கர வாகனத்தில் வந்த நபர், பிரசன்னா வைத்திருந்த செல்போனை லாவகமாக பறித்து விட்டு தப்பி சென்றுவிட்டனர்.

செல் போனை பறிகொடுத்த அந்தப் பெண், தேனாம்பேட்டை போலீசில்  புகார் கொடுத்தார். செல்போன் பறித்துச் சென்றவனின் பின்னால் ஒரு பெண் அமர்ந்திருந்ததாக பிரசன்னா சொல்லவே, உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தினர்.

செல்போன் பறிப்புச் சம்பவம் நடந்த இடத்திலிருந்த சிசிடிவியில் பதிவான வீடியோ காட்சிகளை பார்த்து போலீசாரே அதிர்ந்து போயினர். கொள்ளையனும், அந்தப் பெண்ணும் சென்ற வழிகளில் எல்லாம் உள்ள சிசிடிவிக்களை போலீசார் ஆராய்ந்த போது செல்போன் பறிப்புக்கு அவர்கள் நோட்டமிட்டது உறுதியானது. மேலும் அந்த இருசக்கர வாகனத்தின் நம்பரை வைத்து ஆராய்ந்த போது, அதுவும் திருட்டு வண்டி என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் வேளச்சேரி பீனிக்ஸ் மாலுக்கு பின்புறம் இருந்து அந்த வாகனத்தை கொள்ளையன் திருடி இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். மேலும் வாகனத்தைத் திருடி வரும் வழியில் கிண்டி கத்திப்பாரா பாலத்தில் ஒருவரிடம் அவர்கள் செல்போனைப் பறித்ததாகவும் போலீசில் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிசிடிவி வீடியோ காட்சிகளின் உதவியோடு அந்தக் கொள்ளையனையும், பின்னால் அமர்ந்து சென்ற பெண்ணையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் விசாரணையில் அந்தக் கொள்ளையன், சூளைமேட்டைச் சேர்ந்த டாட்டூ போடும் கலைஞன் ராஜூ என்பதும், அந்தப் பெண் கரூரைச் சேர்ந்த சுவாதி என்பதும் தெரியவந்துள்ளது.

கரூரைச்சேர்ந்த சுவாதி, தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரி விசுவல் கம்யூனிகேசன் படித்து வருவதாக போலீசார் கூறியுள்ளனர். ராஜூ மீது ஏற்கெனவே வடபழனி போலீசில் வாகனத் திருட்டு வழக்கு நிலுவையில் இருப்பதாகக் கூறியுள்ள போலீசார், இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமாகி உடலில் டாட்டூ வரைவதற்காக ராஜூவை அணுகிய போது சுவாதிக்கு காதல் ஏற்பட்டதாகவும், இருவரும் போதைப் பழக்கத்திற்கு அடிமை ஆனதாக தெரிவித்துள்ளனர்.

முதலில் கல்லூரி ஹாஸ்டலில் தங்கிய சுவாதி, இருவரும் தனிமையில் இருக்க சிரமமாக இருந்ததால் பின் காதலன் உதவியோடு சைதாப்பேட்டையில் வீடு எடுத்து தங்கியதாகக் சொல்லப்படுகிறது. சரக்கு, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் வாங்கவும், மாமல்லபுரம், பாண்டிச்சேரி போன்ற பல இடங்களுக்கு ஜோடியாக சென்று வருவதற்காகவும் அவர்கள் இதுபோன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். மேலும் இவர்கள், செல்போன்களை  பறித்து பர்மா பஜாரில் விற்றுவிட்டு இருவரும் போதைப் பொருள் வாங்கிப் பயன்படுத்தியதாகவும் போலீசார் குறிப்பிட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.