இளைஞர்கள் அமைத்து வைத்திருந்த இலவச தண்ணீர் பந்தலில், சரக்கடிக்க போலீசே டம்ளர் திருடியதும், அவர்கள் சிசிடிவியில் சிக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

புதுக்கோட்டை கீரமங்கலம் அருகே உள்ள மேற்பனைக்காடு பகுதியில் கோடை காலத்தை முன்னிட்டு, கடந்த 10 நாட்களுக்கும் மேலாக  அந்த ஊர் இளைஞர்கள் இணைந்து குடிநீர் பந்தல் அமைத்து, மக்களுக்கு தண்ணீர், மோர், சர்பத் உள்ளிற்ற பானங்களை சில்வர் டம்ளர் மூலம் மக்களுக்கு வழங்கி வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து இரவு நேரங்களில் தண்ணீர் பந்தலில் இருந்த டம்ளர்கள் காணாமல் போனதால், யார் இந்தச் செயலில் ஈடுபடுகிறார்கள் என்பதை கண்டறிந்து ஆதாரப்பூர்வமாக அதுகுறித்து போலீசில் புகார் அளிக்க முடிவு செய்தனர்.

இதை கண்டுபிடிப்பதற்காக, அந்த இடத்தில் ஒரு நாட்களுக்கு முன்பாக சிசிடிவி பொருத்தியிருந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை தண்ணீர்ப் பந்தலில் இருந்த சில்வர் டம்ளர் காணாமல் போனதை அடுத்து, அங்கு இருந்த சிசிடிவி கேமராவை சோதனை செய்த இளைஞர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் அங்கு வைக்கப்பட்டிருந்த டம்ளரை இருசக்கர வாகனத்தில் வந்து எடுத்து செல்வது, கீரமங்கலம் காவல்நிலையத்தில் பணி புரியும் காவலர் ஒருவரும், ஊர்க்காவல் படையை சேர்ந்த வீரர் ஒருவரும் என்பது தான்.

இதனையடுத்து இச்சம்பவம் குறித்து விசாரித்த போது கீரமங்கலம் காவல் நிலைய காவலர் அயப்பன் மற்றும் ஊர் காவல் படை வீரர் வடிவழகன் ஆகியோர் இரவு நேரங்களில் மேற்பனைக்காடு பகுதிக்கு ரோந்து வரும் போது சரக்கு அடிப்பது வழக்கம், அப்படி அருந்துவதற்காக தண்ணீர் பந்தலில் இருந்த டம்ளர்களை தினமும் திருடிச் சென்றுள்ளது தெரியவந்தது. 

இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில்,  காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்க அந்த ஊர் இளைஞர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. டம்ளர் திருடு போவதை கண்டறிந்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க முடிவு செய்து, பொருத்திய கேமராவில் சரக்கடிக்க போலீசே திருடி சிக்கிக் கொண்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது