யாருக்குமே தெரியாமல், 2வது திருமணம் செய்துகொண்டு கொலை மிரட்டல் விடுப்பதாக வனத்துறை அதிகாரி அவரின் மனைவி புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  

வேலூர் மாவட்டம் புங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவர், வேலூரை அடுத்த அமிர்தி வனஉயிரியல் பூங்காவில் வனச்சரக அலுவலராக வேலைபார்த்து வருகிறார். சமீபத்தில் இவர் வனப்பகுதியை ஆக்கிரமித்து விவசாயம் செய்துவந்ததாகக் கூறி விவசாயியை மிரட்டி லஞ்சம் வாங்கிய புகாரில் கைதுசெய்யப்பட்டார். 

பின்னர், ஜாமீனில் விடுதலையான ராஜா சஸ்பெண்டு செய்யப்பட்டார். இந்த நிலையில், ராஜாவின் மனைவி மெர்லின் மாலதி, வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்கப் போவதாக தகவல் பரவியதாள் எந்தவித அசம்பாவித சம்பவங்களைத் தடுக்க வேலூர் டி.எஸ்.பி பாலசுப்பிரமணியன் தலைமையிலான போலீஸார் கலெக்டர் அலுவலகத்தில் குவிக்கப்பட்டனர். 

அப்போது, தன் இரண்டு மகன்களுடன் கலெக்டர் அலுவலகம் வந்த மாலதியை போலீஸார் தடுத்துநிறுத்தி முழுமையாகச் சோதனை செய்தனர்.  பின்னர், கலெக்டரின் உதவியாளரிடம் மனு கொடுத்த பின் மாலதி செய்தியாளர்களிடம் பேசும்போது;  வனச்சரக அலுவலராகப் பணியாற்றிவந்த என்னுடைய கணவர் ராஜா, எனக்குத் துரோகம் செய்துவிட்டார். எனக்குத் தெரியாமல் புங்கனூரைச் சேர்ந்த ரேவதி என்பவரை இரண்டாவதாகத் கல்யாணம் செய்துகொண்டார். 

அதுமட்டுமல்ல,பணம், நகைகளையும் எங்களிடமிருந்து பறித்துக்கொண்டு மிரட்டுகிறார். போலீஸ், ரவுடிகள், அரசியல்வாதிகளை வைத்து மிரட்டுவதோடு கொலை செய்யப் பார்க்கிறார். என் கணவரிடமிருந்து எனக்கும் என்னுடைய பிள்ளைகளுக்கும் பாதுகாப்பு கொடுங்க. நியாயம் கிடைக்கலனா மகன்களுடன் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்வதைத்தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை என்று கண்கலங்கினார்.