அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மாணவிகள் மீது கை வைத்து கை வைத்து பேசுகிறார், இதை வீட்டில் சொன்னால் டிசி கொடுத்து வெளியே அனுப்பி விடுவேன் என மிரட்டுகிறார் என்று பள்ளி மாணவிகள் பெற்றோரிடம் சொல்ல, பெற்றோர்கள் மற்றும் ஊர் மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் அருகே பூச்சூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 140 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.இந்நிலையில், 53 வயதான தலைமையாசிரியர் சுப்பிரமணி மீது தான் இப்போது பாலியல் புகார் எழுந்துள்ளது.  

10 வகுப்பு மாணவிகளிடம் சுப்பிரமணி தகாத முறையில் நடந்து கொள்வதாக சொல்லப்படுகிறது. மாணவிகளின் மேல் கை வைத்து பேசுகிறார் என்றும், கை வைக்க வேண்டாம் என்று சொன்னாலும் சுப்பிரமணி கேட்பதில்லை என்றும் புகார் எழுந்துள்ளது. பள்ளியில் நடப்பதை பற்றி வெளியிலோ அல்லது வீட்டில் சொன்னாலோ, டிசி கொடுத்து வெளியே அனுப்பிவிடுவதாக மிரட்டியுள்ளாராம் சுப்பிரமணி.

இதனால், மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் சொல்லி கதறி அழுதுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், பள்ளிக்கு வந்து, தலைமையாசிரியர் சுப்பிரமணியை எச்சரித்தும் சென்றுள்ளனர். இருந்தாலும் மீண்டும் அதேபோல மாணவிகளிடம் சுப்பிரமணி நடந்து கொண்டுள்ளார். இதை கேள்விப்பட்ட பெற்றோர்கள் மற்றும் அந்த கிராம மக்கள்  திரண்டு வந்து பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பள்ளியை பொதுமக்கள் சூழ்ந்து கொண்டுள்ள விவகாரம் அறிந்து விரைந்து வந்த போலீசார், சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், தலைமையாசிரியர் சுப்பிரமணியை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும், மேலும் அவரை கைது செய்ய வேண்டும் என்று முழக்கம் எழுப்பினர். இதையடுத்து, பள்ளி மாணவிகளிடம் படுத்திய விசாரணை அடிப்படையில், தலைமையாசிரியர் சுப்பிரமணியனை கைது செய்து ஏரியூர் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர், மேலும் அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.