ஆயிரம் ரெண்டாயிரமல்ல ஒரு கோடியே 56 லட்சம் ரூபாயை நடுரோட்டில் வீசி எறிந்துவிட்டு தப்பி ஓடியிருக்கிறார் ஒரு மர்ம நபர். சம்பவம் நடந்திருப்பது நமது சிங்காரச் சென்னையில்தான்.

சென்னை கோட்டூர்புரம் காவல் நிலைய போலீசார் நேற்று நள்ளிரவு 2.30 மணியளவில் வரதாபுரம் ஏரிக்கரை லாக் தெருவில் காவல் வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் ஒரு நபர் இருசக்கர வாகனத்தில் அந்த இடத்தில் சுற்றிச்சுற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. இரு முறை போலிஸார் கண்ணில் பட்டு அவர் தலைமறைவாகிவிட்டார்.அடுத்ததாக மூன்றாவது முறையாக அந்த நபர் போலீசாரின் கண்களில் பட்டதையடுத்து விசாரணை செய்வதற்காக அந்த நபரை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த நபர் நிற்காமல் வேகமாகச் சென்றதால் சந்தேகம் வலுத்ததையடுத்து போலீசார் இருசக்கர வாகனத்தை துரத்திச் சென்றனர்.போலீசார் தன்னை விடாமல் துரத்தியதை அடுத்து அந்த நபர் இரு சக்கர வாகனத்தில் இருந்த 3 பைகளை வீசியெறிந்துவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் துரத்துவதை நிறுத்திவிட்டு ரோந்து வாகனத்தை விட்டுக் கீழிறங்கி பைகளை ஆய்வு செய்தபோது அதில் ஒரு கோடியே 56 லட்சத்து 61 ஆயிரத்து 560 ரூபாய் இருந்தது தெரியவந்தது. பணத்தைக் கைப்பற்றி கோர்ட்டூர்புரம் காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைத்திருக்கும் போலீஸார் அந்த மர்ம கோடீஸ்வரன் குறித்து துப்புத் துலக்கி வருகின்றனர்.