இதனால் அங்கிருந்த பொதுமக்கள் அவரை அடிக்க முற்பட்டுள்ளனர், ஆனாலும் அந்த நபர் பார்வையற்றவர்களை தாக்குவதில் குறியாக இருந்தார், இதனால் அங்கிருந்த பத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சேர்ந்து அந்த நபருக்கு தர்ம அடி கொடுத்தனர்.
வழி கேட்டதற்காக பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை பிரம்பால் கடுமையாக தாக்கிய போலீசை பொதுமக்கள் அடித்து உதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவல்லிக்கேணியில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
"காவல்துறை உங்கள் நண்பன் " என்ற வாசகம் அனைவரும் அறிந்ததே, எந்த நேரத்தில் அழைத்தாலும் நண்பனாக வந்து நிற்கும் துறைதான் காவல் என்பதுதான் இதன் பொருள். மக்கள் அச்சமின்றி நடமாடவும், பயமின்றி சென்று வரவும் பொது மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் துறைதான் காவல்துறை. அதனால் தான் காவல்துறை உங்கள் நண்பன் என்ற வாசகம் பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஆனால் சில நேரங்களில் அந்த வாசகத்துக்கு எதிரான செயல்களில் காவல்துறையினர் ஈடுபடும் சம்பவங்களும் நடந்து வருகிறது. பொது மக்களுக்கு உதவி செய்ய வேண்டிய காவல்துறை அவர்களுக்கு உபத்திரவமாக நடந்து கொள்கின்றனர். அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் சென்னை திருவல்லிக்கேணியில் நடந்துள்ளது.

வழிகேட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளை போலீஸ்காரர் சரமாரியாக தாக்கியுள்ள சம்பவம் தான் அது. காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த தினேஷ் (28) மற்றும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த விஜயகாந்த் (36) ஆகிய இருவரும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், இருவரும் சென்னையில் தங்கி ஊதுபத்தி வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு இருவரும் திருவல்லிக்கேணி சிஎன்கே சாலை பெல்ஸ் ரோடு சந்திப்பு அருகே நடந்து வந்தனர். அப்போது அங்கு நின்றிருந்த நபர் ஒருவரிடம் ஓவிஎம் தெரு எங்கே உள்ளது என கேட்டுள்ளனர். அதற்கு அந்த நபர் என்னிடமே வழி கேட்கிறாயா எனக்கூறி, அவர்கள் வைத்திருந்த பிரம்பை பரித்து சரமாரியாக தாக்கியுள்ளார். வலி தாங்க முடியாத அவர்கள் அலறினர்.
அதைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் அந்த நபரிடம் அவர்களை ஏன் அடிக்கிறாய் என கேட்டனர். அந்த நபர் நான் ஒரு போலீஸ் என்னை கேள்வி கேட்கிறீர்களா என திமிராகப் பேசினார். இதனால் அங்கிருந்த பொதுமக்கள் அவரை அடிக்க முற்பட்டுள்ளனர், ஆனாலும் அந்த நபர் பார்வையற்றவர்களை தாக்குவதில் குறியாக இருந்தார், இதனால் அங்கிருந்த பத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சேர்ந்து அந்த நபருக்கு தர்ம அடி கொடுத்தனர். அதன்பின்னர் அந்த நபரை பிடித்து திருவல்லிக்கேணி காவல் நிலைத்தில் ஒப்படைத்தனர். அதன் பின்னர் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளை தாக்கிய அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் அந்த நபர், தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வரும் தினேஷ்குமார் (39) என்பது தெரியவந்தது. தற்போது அவர் மருத்துவ விடுப்பில் இருப்பதும் தெரிந்தது, தினேஷ்குமார் குடிபோதையில் இருந்ததால் போதை தலைக்கேறி பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளை தாக்கியதும் தெரிந்தது. பொதுமக்கள் புகாரை அடுத்து போலீசார் அவர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
