சென்னை துரைப்பாக்கம்  அருகே போலீசை மடக்கிய மர்ம நபர்கள் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தலைமறைவான  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்போரூர் ஆம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 43)  இவருக்கு திருமணமாகி 1 ஆண் குழந்தை,1 பெண் குழந்தை உள்ளது. இவர் துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார்.இன்று அதிகாலை புருஷோத்தமன் பணியை முடித்து விட்டு ஓ.எம்.ஆர். சாலை, எஸ்.ஆர்.பி டூல்ஸ் அருகே வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் பிருஷோத்தமனை  சரமாரியாக தாக்கினர். பின்னர் மறைத்து வைத்திருந்த கத்தியால் கையில் சரமாரியாக குத்திக் கிழித்தனர். பின்னர் தலைமை காவலர் புருஷோத்தமன் ரத்த வெள்ளத்தில் துடித்தார்.

ஆட்கள் நடமாட்டம் தென்படுவதை பார்த்த அந்த நபர்கள் புருஷோத்தை அதேஇடத்தில் விட்டு தப்பியோடினர். இரத்த வெள்ளத்தில் சாலையின் ஓரத்தில் புருஷோத்தமன் கிடந்ததைப்பார்த்த  பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸிக்கு தகவல் தெரிவித்தனர்.பின்னர் அங்குவந்த 108 ஆம்புலன் ஊழியர்கள் தலைமை காவலர் புருஷோத்தமனை மீட்டு சிகிச்சைக்காக இராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுகுறித்து, துரைப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமை காவலர் புருஷோத்தமனை தாக்கிய மர்மநபர்கள் யார், எந்த பகுதியை சேர்ந்தவர்கள், எதற்காக இந்த தாக்குதல் நடத்தினர் .என்பது குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கத்தியால் சரமாரியாக குத்திய நபர்கள்  குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.