கிரானைட் கல்லை செல்போன் போல் வடிவமைத்து மோசடி.! வட மாநில இளைஞர்களை குறி வைத்த கும்பல்- வெளியான அதிர்ச்சி தகவல்
செல்போன் போன்றே கிரானைட் கற்களை வடிவமைத்து, மொபைல் போன் பேக்கிங், மொபைல் பேக் கேஸ், போலி பில்கள் ,ஸ்டிக்கர் என அனைத்தையும் தயார் செய்து ஏமாற்றி விற்ற கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
வறுமையால் தவிக்கும் குடும்பத்தை காப்பாற்ற வேலை தேடி வரும் வடமாநிலத்தை சேர்ந்தவர்களை குறிவைத்து கடந்த சில மாதங்களாக மோசடியில் கும்பல் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், வட மாநிலத்தை சேர்ந்த பிரசாந்த்(18) மற்றும் ஜீவன்(21). ஆகிய இரண்டு பேரும் சென்னையில் பாஸ்ட் புட் கடையில் வேலை செய்து வருகின்றனர். நேற்று இரவு அண்ணாசாலையில் அமெரிக்க தூதரகம் அருகே நின்று பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு இரு வசக்கர வாகனத்தில் வந்த இருவர் தங்களுக்கு அவசராமக பணம் தேவைப்படுவதாகவும், தங்களிடம் புதிய போன் பேக்கிங் உடைக்காமல் உள்ளது.
இதனை வைத்துக்கொண்டு பாதி விலை கொடுத்தால் போதும் என கூறியுள்ளனர். மேலும் ஒரு செல்போன் 40 ஆயிரம் எனவும் தங்களிடம் இரண்டு செல்போன் இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் மொபைல் போன் பில்களையும் காட்டியுள்ளனர். இதனை நம்பிய அந்த இரண்டு வடமாநில இளைஞர்களும் தங்களிடம் இருந்த 30 ஆயிரம் ரூபாய் மட்டுமே இருப்பதாக கூனி பணத்தை கொடுத்துள்ளனர். அப்போது வட மாநில இளைஞர்களிடம் பயன்படுத்திய பழைய போனை மீதி பணத்திற்காக கொடுங்கள் என அந்த மர்ம நபர்கள் வாங்கி வைத்துக்கொண்டனர். அடுத்த சில நிமிடங்களில் அந்த இடத்தில் இருந்த மரம் நபர்கள் எஸ்கேப் ஆகியுள்ளனர்.
இதனையடுத்து வட மாநில இளைஞர்கள் செல்போனை பிரித்து பார்த்த போது அதில் போலியாக பேக்கிங் செய்யப்பட்ட கிரானைட் கல் இருப்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் இது குறித்து ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து சிசிடிவிகளை ஆய்வு செய்த போது மோசடியில் ஈடுபட்ட நபர்கள் பெரியமேடு பகுதியில் உள்ள விடுதியில் தங்கி இருப்பது தெரியவந்தது. உடனே போலீஸார் இருவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் இருவரும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த முகமதுநதீம்(35), காலீத்ஹனீபா(32) என்பது தெரியவந்தது.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சென்னை வந்ததும் சென்னையில் இதே போன்று செல்போன் எனக்கூறி நுங்கம்பாக்கம், சேத்துபட்டு என பல்வேறு இடங்களில் இவர்கள் ஏமாற்றி விற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அதுமட்டுமின்றி ஏமாற்றி பெற்ற செல்போன்களை மொத்தமாக டெல்லிக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருவது தெரியவந்தது. செல்போன் போன்றே கிரைனைட் கற்களை சரியாக வெட்டி புதிய செல்போன் பேக் கேசில் அவற்றை பொருத்தி, ஸ்டிக்கர், செல்போன் நிறுவனத்தில் வாங்கியது போன்ற போலி பில்கள், ரப்பர் ஸ்டாம்ப் போன்றவற்றை தயார் செய்து புதிய செல்போன் போல பேக் செய்து வடமாநில தொழிலாளர்களை குறிவைத்து இந்த மோசடியில் ஈடுப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.