சென்னையில் உள்ள பிரபல மாலான விஆர் மாலில் நடைபெற்ற மது விருந்தில், அளவுக்கு  அதிகமான மது போதையில் மென் பொறியாளர் உயரிழந்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மது விருந்தில் போதை பொருள் பயன்படுத்தப்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

வார இறுதி நாள் கொண்டாட்டம்

வார இறுதிநாட்களான வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கொண்டாட்டங்களுக்கு பஞ்சம் இருக்காது, அந்த அளவிற்கு சென்னையில் பல்வேறு நட்சத்திர விடுதியில் டிஜேவுடன் விருந்து நிகழ்ச்சி நடைபெறும். இதில் கலந்து கொள்ள பல ஆயிரங்கள் கட்டணங்களாக வசூலிக்கப்படும். இந்த விருந்தில் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் இளைஞர்களும், தந்தையின் பணத்தில் ஊர் சுற்றும் இளைஞர்களும் கலந்து கொள்வார்கள். அந்த வகையில் தான் சென்னையில் நடைபெற்ற மது விருந்தில் அளவுக்கு அதிகமாக மது அருந்தி மென் பொறியாளர் உயிர் இழந்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோயம்பேட்டிற்கும் அண்ணா நகருக்கும் இடையே அமைந்துள்ளது வி.ஆர் மால் இந்த மாலில் திரையரங்கம், பொழுதுபோக்கு கூடம், உணவு கூடம், உள்ளிட்ட பல்வேறு உயர் ரக கடைகள் உள்ளன.

வி.ஆர் மாலில் மது விருந்து கொண்டாட்டம்

இந்த பிரபலமான வி.ஆர் மாலில் உள்ள ஒரு அரங்கில் நேற்று இரவு மது விருந்து நடைபெற்றுள்ளது. இந்த மது விருந்தில் பிரேசில் நாட்டை சேர்ந்த பிரபல டி.ஜே வர வைத்து மது விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு ஆப் மூலம் முன் பதிவும் செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு 900 பேர் முன் பதிவு செய்து கலந்து கொண்டனர். இந்தநிலையில் அனுமதியின்றி மது விருந்து நடைபெறுவதாக வந்த தகவலையடுத்து அந்த இடத்திற்கு சென்ற போலீசார் மது விருந்தை தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது அங்கிருந்த 840க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அனுமதியின்றி மது விருந்து நடத்தியதற்காக மது விருந்திற்கு ஏற்பாடு செய்த மேலாளார் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிகளவு மது அருந்தி இளைஞர் உயிரிழப்பு

இந்தநிலையில் மதுபான விருந்தில் மடிப்பாக்கத்தை சேர்ந்த பிரவீன் என்பவரும் தனது நண்பர்களோடு கலந்து கொண்டுள்ளார். அதிக அளவு மது அருந்திய காரணத்தால் பிரவீன் சம்பவ இடத்திலேயே மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து மருத்துவமனையில் பிரவீன் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை உயிர் இழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வி.ஆர் மாலில் நடைபெற்ற மது விருந்தில் போதை பொருட்களும் பயன்படுத்தப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் பிரவீனின் நண்பர்கள் மற்றும் மது விருந்து ஏற்பாடு செய்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.