திருத்திணியில் பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்த பாமக பிரமுகரை 3 பேர் கொண்ட மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி காசிநாதபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவர் பாட்டாளி மக்கள் கட்சியின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட துணை தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். இன்று காலை திருத்தணி காந்தி ரோடு பகுதியில் அவரது இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது திடீரென எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் அவர் மோதியது. 

பிறகு நிலைதடுமாறி கீழே சரிந்தார். அப்போது பட்டப்பகலில் அந்த கும்பல் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டது. இதில் தலை, கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தாக்கியதில் பலத்த காயம் அடைந்த சுரேஷ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அதே கட்சியை சேர்ந்த திருத்தணி நகர செயலாளர் சற்குணம் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த கொலை முயற்சி தொடர்பாக பட்டாபிராமைச் சேர்ந்த சற்குணம், இந்திரா நகரைச் சேர்ந்த குமரேசன் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் பலத்த காயமடைந்துள்ள பாமக பிரமுகர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.