சென்னை ஆவடியில் திருமண ஆசை காட்டி பிளஸ் 2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். 

ஆவடி அடுத்த ஆரிக்கம்பேடு அமிர்தாபுரம் பகுதியை சார்ந்தவர் குருபிரசாத் (19). கூலித்தொழிலாளி. இதே பகுதியில் 17 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வந்தாள். அவள் பாரிமுனையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறாள். இதற்கிடையில், மாணவிக்கும், குருபிரசாத்துக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாறியது. 

இந்நிலையில், கடந்த 30-ம் தேதி குருபிரசாத், பள்ளி மாணவியை அழைத்துக்கொண்டு வியாசர்பாடி பகுதிக்கு சென்றுள்ளார். பின்னர், மாணவியின் காதில் கிடந்த கம்மலை அடகு வைத்து அங்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார். இதனையடுத்து, திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். நீண்ட நேரமாகியும் மகளை காணவில்லை என்பதால் பெற்றோர்  காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் வாலிபருடன் இருந்த மாணவியை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், குருபிரசாத் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசாரிடம் மாணவி தெரிவித்துள்ளார். இதனையடுத்து இந்த வழக்கு ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குருபிரசாத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.