விழுப்புரத்தில் பட்டப்பகலில் பெட்ரோல் பங்க் மேலாளர் வெடிகுண்டு வீசி கொடூர கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் அருகிலுள்ள பனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (50). இவர் தற்போது ஆனந்தாநகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் கம்பன் நகர் உள்ள நாகலட்சுமி பெட்ரோல் பங்கில் மேலாளராக பணியாற்றி வருகிறார். எப்போதும் போல் பெட்ரோல் நிலையத்தில் உள்ள அலுவலகத்தில் வேலை செய்துக்கொண்டிருந்த போது காலை 11.30 மணியளவில் பெட்ரோல் போடுவது போல் கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அப்போது, 4 பேர் கொண்ட மர்மகும்பல் அலுவலகத்திற்குள் நுழைந்து சீனிவாசன் மீது நாட்டு வெடிகுண்டு வீடியும், அரிவாளால் கொடூரமாக வெட்டினார். 

இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த சீனிவாசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் 4 பேரும் கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றுள்ளனர். சத்தம் கேட்டு ஓடிவந்த பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலையாளிகள் கத்தியை காட்டி மிரட்டி சென்றுள்ளனர். இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த சீனிவாசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் பெட்டோல் பங்கில் இருந்த கண்கானிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், பெட்ரோல் பங்க் மேலாளர் மீது வெடிகுண்டு வீசியது யார்? எதற்காக வீசினார்கள்? முன்விரோதம் காரணமாக வெடிகுண்டு வீசப்பட்டதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.