பாமக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் கடலூரில்  பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை அடுத்த எய்தனூரில், நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு இடங்களில்
சுவர்களில் பாமக சின்னம் மாம்பழம் வரையப்பட்டிருந்தது. அதே பகுதியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சிலர், பா.ம.க சார்பில் வரையப்பட்டிருந்த சுவர் விளம்பரத்தில் பெருக்கல்குறி போட்டுத் தங்கள் கட்சிப் பெயரை எழுதியுள்ளனர்.

இதுகுறித்து இருதரப்பினருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு, நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் இரு தரப்பினரும்
தனித் தனியே புகார்செய்துள்ளனர்.

இந்நிலையில், அதிகாலை 2 மணியளவில் எய்தனூர் மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள பாமக பிரமுகர் ஆறுமுகம்  வீட்டில், மர்மக் கும்பல் ஒன்று பெட்ரோல் குண்டை வீசியுள்ளது. இந்த அதிபயங்கர சம்பவத்தில்  எந்தவிதமான அசம்பாவிதமும் நடக்கவில்லை. அதுமட்டுமல்ல பாமக ஆறுமுகம் வீட்டின் எதிரே உள்ள முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சீத்தாராமன் வீட்டு காம்பவுண்டு சுவருக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரை எரிக்க முயன்றுள்ளனர். அப்போது, சீத்தாராமன் வெளியே வரவும் அந்தக் தப்பி கும்பல் ஓடிவிட்டது. 

இதுகுறித்து, நெல்லிக்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில் ஆறுமுகம் புகார் கொடுத்துள்ளார். போலீஸார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், தொடர்ந்து கிராமத்தில் பதற்றம் நிலவிவருவதால், அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.