இந்தியா முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொடிய கொரோனா வைரஸ், தமிழகத்திலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,323 ஆக அதிகரித்திருக்கிறது. இதுவரை தமிழகத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பரவுதலை கட்டுப்படுத்தும் விதமாக மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வலியுறுத்தி நாடு முழுவதும் ஊரடங்கு மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகள் அன்றி வேறு எந்த காரணம் கொண்டும் வெளிவரக் கூடாது என்று அரசு அறிவித்திருக்கிறது. அவ்வாறு அத்தியாவசிய தேவைகளுக்காக வெளிவரும் போதும் கூட முகக் கவசங்கள் அணிந்து பாதுகாப்பாக வர வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி இருக்கிறது.

எனினும் பல்வேறு இடங்களில் ஊரடங்கு விதிகளை மீறி வாகனங்களில் பலர் சுற்றி திரிகின்றனர். அவர்களை கைது செய்யும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதமும் விதித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் இன்று வரை ஒரு கோடி ரூபாய் ஊரடங்கு விதிகளை மீறியவர்களிடம் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கி கலெக்டர் உத்தரவிட்டிருக்கிறார். அதன் காரணமாக கடந்த 3 நாட்களாக முகக் கவசம் அணியாமல் செல்பவர்களை காவல்துறையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். நேற்று ஒரே நாளில் முகக் கவசம் அணியாமல் சென்றதாக 84 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 84 பேர் கைதாகி இருக்கின்றனர். கோவை மாநகர பகுதிகளான பெரியகடைவீதி, ஆர்எஸ் புரம், வெரைட்டி ஹால் ரோடு ஆகிய இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது முகக் கவசம் அணியாமல் சென்றவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நேற்று ஒரே நாளில் கோவை மாவட்டத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 678 வழக்குகள் பதிவாகி 212 பேர் கைதாகி இருக்கின்றனர். பின் கைதானவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். கோவை மட்டுமின்றி தமிழகத்தின் பல மாவட்டங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வரும் மக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டுமென்றும் அவ்வாறு அணியாமல் வருபவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் எச்சரித்திருக்கிறார். அதேபோல சென்னை, நெல்லை, கன்னியாகுமரி, விழுப்புரம், திருப்பூர் என பல மாவட்டங்களில் முகக் கவசம் கட்டாயமாக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.