ஆந்திர மாநிலத்தில் போலி சினிமா டிக்கட் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் இதனால் பலர் தங்கள் பணத்தை ஏமாந்து வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

ஆந்திர மாநிலத்தில் போலி சினிமா டிக்கட் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் இதனால் பலர் தங்கள் பணத்தை ஏமாந்து வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. போலி டிக்கெட் பெற்று வருபவர்கள் மற்றும் ஒரிஜினல் டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கும் இடையே திரையரங்கில் தகராறு ஏற்படும் சூழல் அரங்கேறிவருகிறது.

கள்ள நோட்டுகளை பார்த்திருக்கிறோம், போலி எலக்ட்ரானிக் பொருட்களை பார்த்திருக்கிறோம், பல பொருட்களின் போலீ பிராண்டுகள் விற்பனைக்கு வருவதையும் அறிந்திருக்கிறோம், ஆனால் இதுவரை யாராவது போலி சினிமா டிக்கெட்டுகளை பார்த்திருக்கிறீர்களா? பிளாக் டிக்கெட் மோசடி பற்றி அனைவருக்கும் தெரியும் ஆனாலும் போலி டிக்கெட் மோசடி பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை, ஆனால் தற்போது ஆந்திராவில் உள்ள திரையரங்குகளில் போலி டிக்கெட்டுகள் எண்ணிக்கை நிரம்பி வழிகிறது. தங்களுக்கு பிடித்த ஹீரோக்களின் படங்களை ஃபர்ஸ்ட் டே, ஃபர்ஸ்ட் ஷோ பார்க்க ரசிகர்கள் கூட்டம் அலை மோதுகின்றன. அதற்கு எவ்வளவு செலவானாலும் அதை வாங்க ரசிகர்கள் தயாராக இருக்கின்றனர். அதை பயன்படுத்தி சிலர் அவர்களுக்கு போலி டிக்கெட் கொடுத்து பணம் சம்பாதிக்கின்றனர். டிக்கெட் கிடைத்த மகிழ்ச்சியில் திரையரங்குக்கு செல்வோர் பின்னர் அது போலி டிக்கெட் என்று தெரிந்து ஏமாறும் சூழல் அதிகரித்து வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏலூர் மாவட்டத்தின் மையப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் படம் ரிலீசுக்கு முந்தைய நாள் 300 ரூபாய் கொடுத்து காலை பெனிபிட்ஸ் ஷோவுக்கு டிக்கெட் பெற்றார். திரையரங்கம் சென்று தனது டிக்கெட்டில் இருந்த எண்ணில் சென்று அமர்ந்தார். அவர் போய் உட்கார்ந்த ஒரு சில நிமிடங்களில் வேறு ஒருவர் வந்து அந்த இருக்கைக்கான டிக்கெட்டை காட்டினார். இதனால் இருவருக்குமிடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. தியேட்டர் ஊழியர்கள் வந்து அவர்கள் இருவரையும் சமாதானம் செய்தனர். போலி டிக்கட் வைத்திருந்தவரை வெளியேறுமாறு கூறினர். இதனால் அவமானத்தில் கூனிக்குறுகி அந்த நபர் திரையரங்கிலேயே போராட்டம் செய்தார். இந்த டிக்கெட் எப்படி வந்தது என்று சொல்லுங்கள் என்று கத்து கூச்சலிட்டார். 

ஆனால் அங்கு அவருக்கு உரிய பதில் கிடைக்காததால் அதுகுறித்து ஏலூர் ஒன் டவுன் காவல் நிலையத்தில் புகார் செய்தார். பிளாக் டிக்கெட் சர்ச்சை போலீஸுக்கு சகஜமானது என்றாலும், போலீ டிக்கெட் புகாரைக் கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவரது புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதாவது திரைப்படம் வெளியான உடன் சில திரையரங்க ஊழியர்களே போலி டிக்கெட்டை அச்சடித்து பணம் சம்பாதிப்பது தெரிய வந்துள்ளது. பெரிய திரைப்படங்கள் வெளியாகும் போது ஒவ்வொரு காட்சிக்கும் 10 முதல் 20 போலி டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டு அதிக விலைக்கு விற்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இருக்கைகள் போதுமானதாக இல்லை எனக்கூறி கூடுதல் நாற்காலிகளை போட்டு சமாளிப்பதும் விசாரணையில் தெரிந்தது.

பிடித்த ஹீரோ ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ என்பதால் பார்வையாளர்கள் அதை பெரிதாக கண்டு கொள்வதில்லை, இந்த பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டு தியேட்டர் ஊழியர்கள் இந்த தில்லுமுல்லில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது. ஒரு ஷோவுக்கு குறைந்தது 10 டிக்கெட் விற்பனை செய்து ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கின்றனர், இப்படி செய்வதன் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 10 ஆயிரம் ரூபாய் வரை சட்டவிரோதமாக அவர்கள் சம்பாதிக்க முடியும் என கூறப்படுகிறது. இது திரையரங்க உரிமையாளர்களுக்கு தெரிந்து நடக்கிறதா தெரியாமல் நடக்குமா என்பது விசாரணைக்கு பின்னரே தெரியவரும். எனவே ஆன்லைனில் டிக்கெட்டை வாங்குபவர்கள் அனைத்தையும் சரி பார்த்து வாங்க வேண்டும் என எச்சரித்து வருகின்றனர்.